Arm Transplant: 10 ஆண்டுகால தவிப்பு..16 மணிநேர அறுவை சிகிச்சை.. இரண்டு கைகள் பொருத்தப்பட்ட ஆசியாவின் முதல் நபர்

விபத்தில் கைகளை இழந்த நபருக்கு 16 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு கைகளையும் வெற்றிகரமாக பொருத்தி இந்திய மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

Continues below advertisement

விபத்தில் கைகளை இழந்த நபருக்கு 16 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு கைகளையும் வெற்றிகரமாக பொருத்தி இந்திய மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் இரண்டு முழு கைகளும் பொருத்தப்படுவது ஆசியாவிலேயே இது தான் முதல்முறை. இந்த சாதனையை மும்பையை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

Continues below advertisement

கைகளை இழந்த பிரேமா ராம்:

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் பகுதியை சேர்ந்த பிரேமா ராம் 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட மின்சார விபத்தில் தனது இரண்டு கைகளயும் இழந்தார். வயல்வெளியில் மின்சார கம்பம் அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் அவரது இரண்டு கைகளிலும் படுகாயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து ராமின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அவரது இரண்டு கைகளும் அகற்றப்பட்டன.

ராமின் குடும்பத்தினர் செயற்கை உறுப்புகளைப் பொருத்த முயன்றனர், ஆனால் அது அவருக்கு பலனளிக்கவில்லை. அவரது கைகள் தோள்பட்டை மட்டத்தில் துண்டிக்கப்பட்டதால், அன்றாட நடவடிக்கைகளுக்கு கூட ராம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தார். இந்த காலகட்டத்திலும் மனம் தளாரமல் இருந்த ராம், கால்கள் மூலம் எழுத பயிற்சி எடுத்துள்ளார்.

16 மணி நேர அறுவை சிகிச்சை:

இந்நிலையில் தான் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தொடங்கிய ராமிற்கு, 16 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் தோள்பட்டை வரையில் கைகளை பொருத்தும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 18 முதல் 24 மாதங்கள் வரையில் இந்த சிகிச்சை தொடரும் எனவும், 18 மாதங்களுக்குள் கணிசமான அளவிற்கு கைகளை பயன்படுத்த முடியும் எனவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவிலேயே முதல்முறை

மும்பையில் உள்ள குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையின்  பிளாஸ்டிக், கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் நிலேஷ் ஜி சத்பாய் தலைமையிலான குழு தான் ராமிற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சத்பாய்,  ”முன்னதாக  ஐரோப்பாவில் மட்டுமே இருபக்கங்களிலும் மொத்த கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அந்த வகையில் இத்தகைய அறுவை சிகிச்சை ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தியாவில் தான் நடைபெற்றுள்ளது.

கை மாற்று அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலானது. இது காலத்திற்கு எதிரான போட்டி. இதில் செயல்முறை, நேரம் மற்றும் ஒருங்கிணைப்பு முக்கியம். அதனால் முடிந்தவரை விரைவாக உறுப்புகள் உடலுடன் இணைக்கப்படுகின்றன, இதனால் அதிக எண்ணிக்கையிலான தசைகள் மாற்றப்படுவதால் இரத்த ஓட்டம் உடனடியாக தொடங்குகிறது. இருபுறமும் இதேபோன்ற அறுவை சிகிச்சை செய்வது தொழில்நுட்ப மற்றும் தளவாட சவால்களை அதிகரிக்கிறது.

இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது. செயற்கை முறைகள் நிரந்தர தீர்வை வழங்காததால் இது தேவைப்படுகிறது.  தோள்பட்டை மட்டத்தில் ஒரு கை மாற்று அறுவை சிகிச்சையானது, இந்தியாவில் கடினமானதாகவோ அல்லது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவோ கருதப்படுவது மாற்றம் கண்டுள்ளதோடு, அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் இருப்பதை விட 8 முதல் 10 மடங்கு அதிக செலவு குறைந்ததாக மாறியுள்ளது” எனவும் கூறினார்.

ராம் மகிழ்ச்சி:

சிகிச்சை குறித்து பேசிய ராம், ”நான் வாழ்க்கையை நேசிக்கிறேன். அதை அதிகம் பயன்படுத்த விரும்புகிறேன். எனது கல்வி மற்றும் பி எட் தேர்வுகளை சமீபத்தில் முடித்தேன். எனக்கு புதிய கைகளை வழங்கியதற்காக எனது குடும்ப உறுப்பினர்கள், மருத்துவர்கள் குழுவிற்கும் நன்றி. இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். குணமடைந்ததும் எனக்கான எல்லாவற்றையும் நானே செய்து முடிப்பதை எதிர்நோக்குகிறேன்" என்று என கூறினார்.

Continues below advertisement