குஜராத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நாட்டின் முதல் கடல்வழி விமான போக்குவரத்து சேவையை, பல்வேறு காரணங்களால் மாநில அரசு கைவிட்டுள்ளது.


கடல்வழி விமான சேவை:


இந்தியாவின் முதல் கடல் வழி விமான சேவையாகக் கருதப்படும் இந்த விமான சேவை, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் மிகவும் ஆரவாரத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது. குஜராத்தின் கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கும், அகமதாபாத்தின் மிகவும் பிரபலமான சபர்மதி ஆற்றங்கரைக்கும் இடையே இந்த விமானம் இயக்கப்பட்டது. இந்த சேவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என, பிரதமர் மோடி பேசியிருந்தார்.


கட்டுக்கடங்காத செலவு:


விமான சேவை தொடங்கிய நாளில் இருந்து, கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த விமானம் இயக்கப்பட்ட வரையில், அந்த விமானத்திற்காக குஜராத் அரசு 13.15 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. குறைந்தது இரண்டு முறையாவது சர்வீஸ் மற்றும் பழுது பார்ப்பதற்காக, விமானத்தை மலேசியாவிற்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. 


விமான சேவை நிறுத்தம்:


இந்நிலையில், கடல்வழி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ அர்ஜுன் மோத்வாடியா சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய மாநில விமான போக்குவரத்து அமைச்சர் பல்வந்த்சிங் சந்தன்சிங் ராஜ்புத்,  ”கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கும், அகமதாபாத்தின் மிகவும் பிரபலமான சபர்மதி ஆற்றங்கரைக்கும் இடையிலான கடல் விமான சேவை செயல்பாட்டு செலவு மற்றும் அதிக பராமரிப்பு செலவுகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.


தொடர்ந்து, விமானத்தின் இயக்கச் செலவு மிகவும் அதிகமாக இருந்தது, அதை இயக்கும் நிதிச் சுமையை ஆபரேட்டரால் தாங்க முடியவில்லை. விமானம் வெளிநாட்டுப் பதிவில் இருந்ததாலும், அதன் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டில் சிக்கல்கள் இருந்ததாலும், சேவையை மூட வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசு தள்ளப்பட்டது. இருப்பினும், சேவையை மீண்டும் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது” என்றும் அமைச்சர் கூறினார்.


சுற்றுலா தளங்களுக்கு ஹெலிகாப்டர் வசதி:


தொடர்ந்து, குஜராத்தில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான இணைப்பை ஏற்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது, முதல் கட்டமாக அகமதாபாத்-கேஷோத்-போர்பந்தர்-அகமதாபாத் செக்டாரில் விமானங்கள் இயக்கப்படும் . இந்த வழித்தடத்திற்கு 9 இருக்கைகள் கொண்ட விமானம் பயன்படுத்தப்படும் .


மத மற்றும் சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் இணைப்பைத் தொடங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, சோம்நாத், அம்பாஜி, துவாரகா, கிர் மற்றும் சபுதாரா ஆகிய இடங்களுக்கு இந்த சேவை வழங்கப்படும். இந்த இடங்களில் அரசு ஹெலிபேடுகளை உருவாக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.