இந்தியாவில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று 2,994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 3,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  கடந்த ஆறு மாதங்களில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் கொரோனா பாதிப்பு இதுவே ஆகும். 2 நாட்கள் 3 ஆயிரத்திற்கு மேல் பதிவான ஒரு நாள்  கொரோனா பாதிப்பு நேற்று 2,994-ஆக குறைந்தது.


அதிகரிக்கும் கொரோனா


கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் முயற்சியின் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது


இருப்பினும், பல்வேறு வைரஸ்கள் உருவாகி மக்களை தொடர்ந்து அச்சுறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.


4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா


கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3,824 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,784 பேர் கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4.41 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 2.87 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானர்களின் வார விகிதம் 2.24 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது.


இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:


இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 867ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிற்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தில் தலா ஒரு உயிரிழப்பும், கேரளாவில் 2 உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. இதுவரை, 92.18 கோடி முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த 24 நேரத்தில் 1.33 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 




மேலும் படிக்க


கல்வி சான்றிதழ் விவகாரம்.. பிரதமர் மோடியை கலாய்த்து சுப்பிரமணியம் சுவாமி ட்வீட்..!


இந்தூர் கோயில் விபத்து: மீட்புப் பணியின்போது நிகழ்ந்த சோகம்; அதிர்ச்சி வீடியோ