இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இயல்புக்கு அதிகமான அளவில் வெப்பம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


காலநிலை மாற்றத்தின் தாக்கம் தான் பருவம் தவறிய மழை. அதிகரிக்கும் புயல், சூறாவளிகள். அப்படித்தான் இந்தியாவிலும் பரவலாக மார்ச் மாதம் மழை பெய்து முடித்தது. ஏப்ரல் பிறந்துவிட்ட நிலையில் இந்தியா கோடைக்குள் நுழைந்துவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இயல்புக்கு அதிகமான அளவில் வெப்பம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மிருதஞ்சய் மொஹபத்ரா இன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்த கோடையில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதுமே பரவலாக வழக்காத்துக்கும் மாறாக அதிகளவில் வெப்பம் நிலவும் என்றார்.


மேலும் அவர் கூறியதாவது: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதுமே பரவலாக வழக்காத்துக்கும் மாறாக அதிகளவில் வெப்பம் நிலவும். இந்த மூன்று மாதங்களில் மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் அதிகளவில் வெப்ப அலைகள் பாதிப்பும் நிலவும்.


புவி வெப்பமயமாதலால் காலநிலை மாற்றம் மிகவும் மோசமாக அதன் தாக்கங்களை காட்டி வருகிறது. 2022ல் இந்திய துணைக் கண்டம் மோசமான வெப்ப அலைகளை சந்தித்தது. இதனால் கோதுமை பயிர்கள் பாதிப்பை சந்தித்து உலகளவில் கோதுமை விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன.


இந்த ஆண்டும் எதிர்பாராமல் மார்ச் மாதம் அதிகப்படியான மழை பெய்துள்ளது. இதனால் கோதுமை, கடுகு, வெங்காய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு தானியங்கள் விலை உயரும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பெய்த மழையளவு வழக்கத்தைவிட 26 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வெப்ப நிலவரத்தை சமாளிக்க ஆயத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. கோடையில் மின்சார தேவை பலமடங்கு அதிகரிக்கும் என்பதால் அது பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது. மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டிகர் மாநிலங்களில் இம்மாதம் (ஏப்ரல் மாதம்) வழக்கத்தை விட அதிகளவில் வெப்ப அலைகள் வீசக் கூடும். 2015ல் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 2020ல் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்தது. 2023ல் அது இன்னும் அதிகரிக்கலாம்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.