மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணறு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணியின் போது பெண் ஒருவர் மீண்டும் கிணற்றுக்குள்ளேயே விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் அமைந்துள்ளது பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி அக்கோயிலுக்கு நிறையபேர் வருவதும் உண்டு. இந்த நிலையில், ராமநவமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் இந்த கோயிலில் நடைபெற்றது. இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில், கோயிலில் இருந்த கிணறு ஒன்று முழுவதும் ஸ்லாப் எனப்படும் சிமெண்ட் கற்களால் மூடப்பட்டு இருந்தது. அந்த ஸ்லாப் கற்கள் மீது ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த சிலாப் கற்கள் உடைந்து விழுந்ததில் கிணற்றுக்குள் ஏராளமான பக்தர்கள் தவறி விழுந்தனர்.திடீரென நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் இந்த விபத்து சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடும், கயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதறவைக்கும் வீடியோ:
இந்த வீடியோவில் பதறவைக்கும் காட்சிகள் இருப்பதால் இளகிய மனம் கொண்டோர் இதைக் கடந்து செல்வது நலம். அந்த வீடியோவில் இருப்பதாவது: மீட்புப் பணியின்போது வீரர்கள் கயிறு கட்டி ஒரு பெண்ணை மீட்க முயற்சிக்கின்றனர். அந்தப் பெண் சற்று கனத்த உடல்வாகு கொண்டவராக உள்ளார். வீரர்கள் அவரை கிணற்றின் விளிம்பு வரை இழுத்துவிடுகின்றனர். ஆனால் விளிம்பை நெருங்கியபோது அந்தப்பெண் மயங்கி விடுகிறார். அவரை ஏணியில் இருந்தவாறு தாங்கிப்பிடிக்கும் மீட்புக்குழுவைச் சேர்ந்த நபர் அவரை மேலே ஏற்றிவிட முயற்சி செய்கிறார். ஆனால் அப்போது யாரும் எதிர்பாராமல் அவரைத் தாங்கியிருந்த கயிறு அறுந்து விழுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் மீண்டும் அதே கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார். சுற்றியிருப்பவர்கள் எல்லாம் ஒருசில விநாடிகள் அதிர்ச்சியில் உறைந்து போய்விடுகின்றனர். அதனைப் பார்க்கும் நமக்குமே அதே போன்றதொரு உணர்வு தான் ஏற்படுகிறது.