Covid : இந்தியாவில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,890 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,433ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 1.56 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களின் வார விகிதம் 1.29 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது.
இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:
இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 831ஆக உயர்ந்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு இறப்பு பதிவாகியுள்ளது. கேரளாவில் 3 இறப்புகள் பதிவாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவரின் விகிதம் 1.19 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 9,433ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 832 அதிகமாகும். இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அறிவுரை
இந்நிலையில், நாட்டின் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3ஆம் தேதி 'மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், இன்று 99வது 'மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், ”நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிவதோடு, கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க