ட்விட்டரை தெறிக்கவிட்ட ராகுல் காந்தி:
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ட்விட்டரில் தன்னுடைய சுயவிவர குறிப்பை அவர் மாற்றி இருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. முன்னதாக, ராகுல் காந்தி ட்விட்டர் பயோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது, தகுகி நீக்கம் செய்யப்பட்ட எம்பி என மாற்றியுள்ளார் ராகுல் காந்தி. "ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ பக்கம்| இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர்| தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி" என பயோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தி:
பிரதமர் மோடிக்கு எதிராகவும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தி, அதானி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து அவர் பேசியது பேசு பொருளாக மாறியது.
லண்டனில் ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்திக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முடக்கினர். இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்தது. இதற்கிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்தது.
அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். ஆனால், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்திக்கு 30 நாள்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், எம்பி ஒருவருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் குற்ற தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். இந்த சட்டத்தின் கீழ்தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம், தேசிய அளவில் புயலை கிளப்பியுள்ள நிலையில், கட்சி சார்பற்று ராகுல் காந்திக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மூன்றாவது அணிக்கான முயற்சியை மேற்கொண்டு வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோர் தகுதி நீக்க விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடியிருந்தனர்.
மேலும் படிக்க: PM Modi: குஜராத் - தமிழ்நாடு பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான பிணைப்பு.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழாரம்..!