மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவினை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் நேற்று அதாவது செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி  மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று அம்மசோதா மீதான விவாதடம் நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். 


மேலும் இது தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில், மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள் எனவும், இன்றே இந்த மசோதா நிறைவேற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார். 


ராகுல் காந்தி தனது பேச்சில், “ மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையற்றதாக உள்ளது. நாடாளுமன்றத்தில் செங்கோல் குறித்து நடைபெற்ற விவாதத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நாடு பெண்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. நாட்டில் சக்தி வாய்ந்த அமைப்பான பஞ்சாயத்துகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுத்தது காங்கிரஸ் கட்சி. மகளிர் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுவது நாடு முழுவதும் உள்ள மகளிருக்கு மிகவும் முக்கியமானது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மகளிருக்கு இந்த மசோதாவில் இடஒதுக்கீடு இல்லாததால், இந்த மசோதா முழுமையற்றதாக உள்ளது. கடைநிலையில் உள்ள சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை இன்றே மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். தொகுதி மறுவரையறைக்குப் பின்னர்தான் மகளிருக்கு இடஒதுக்கீடு என்பது ஏற்கத்தக்கதல்ல. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ள நிபந்தனைகள் இந்த மசோதாவை உடனே நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான திட்டமாக இல்லாமல், ஒத்திபோடுவதற்கான தந்திரமாக உள்ளது. புதிய நாடாளுமன்றம் மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை இங்கு காணமுடியவில்லை. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவரை இங்கே பார்க்கமுடியவில்லை.


ஓபிசி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் 90 செயலாளர்கள் உள்ளனர். அதில் எத்தனைப் பேர் ஓ.பி.சி பிரிவைச் சார்ந்தவர்கள். மத்திய அரசின் 90 நிர்வாக செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள். நாடாளுமன்றம் சட்டமன்றம் மற்றும் நீதித்துறையில் ஓபிசி பிரிவினருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பெண்கள் சமூகத்தில் ஒரு பிரிவினர் என்பதைப் போல் ஓபிசி பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும். நாட்டின் பெரும்பான்மை சமூகமாக உள்ள ஓபிசி பிரிவினர் மத்திய அரசின் நிர்வாகத்தில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்” இவ்வாறு ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 


ராகுல் காந்தி ஒபிசி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததைக் குறித்து பேசும்போது பாஜக எம்.பிக்கள் கூச்சல் இட்டனர். 




CM MK Stalin: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: "வரவேற்கிறோம்.. தமிழ்நாட்டை வஞ்சிக்கமாட்டோம் என உறுதி தருக” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


Womens Reservation Bill: மக்களவையில் தாக்கலானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா


Womens Reservation Bill: மகளிர் இடஒதுக்கீடு.. ராஜீவ் காந்தி போட்ட விதை... வளர்த்தெடுக்கும் மோடி? 1989 முதல் நடந்தது என்ன?