கடந்த 1989ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தற்போது வரை, நிறைவேற்றப்படாதது ஏன் என்பது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
நேற்று தொடங்கிய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர், அடுத்த நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் படேல் வெளியிட்டு இருந்த டிவிட்டர் பதிவில்”மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் தார்மீக தைரியம் மோடி அரசுக்கு மட்டுமே உள்ளது. இது அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டு இருந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த டிவீட் நீக்கப்பட்டது.
காங்கிரஸ் கேள்வி:
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை. மத்திய அமைச்சரவையின் அறிக்கையின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ரகசியம் காக்காமல் இதுகுறித்து தெரிவித்து இருந்தால் விவாதித்து ஒருமித்த கருத்தைக் கட்டியெழுப்பியிருக்கலாம்” என பதிவிட்டுள்ளார். இப்படி இருக்கையில் உண்மையில் மகளிருக்க்கான இந்த இடஒதுக்கீடு மசோதா முதலில் எப்போது, யாரால் தாக்கல் செய்யப்பட்டது என்ற வரலாற்று நிகழ்வுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மசோதா சொல்வது என்ன?
அரசியலமைப்பு 108வது திருத்த மசோதா, 2008, மாநில சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள மொத்த இடங்களின் மூன்றில் ஒரு பங்கை (33%) பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்கிறது. அதோடு, இந்த 33% இட ஒதுக்கீட்டிற்குள் SC, ST மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டை கொண்டு வரவும் இந்த மசோதா முன்மொழிகிறது. மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள வெவ்வேறு தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாம். திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிறுத்தப்படும் என்றும் மசோதா கூறுகிறது.
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா வரலாறு:
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1989 ஆம் ஆண்டு மே மாதம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான விதையை முதன்முதலில் விதைத்தார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை.
- 1992 மற்றும் 1993ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் 72 மற்றும் 73 ஐ மீண்டும் அறிமுகப்படுத்தினார். இவை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33%) இடங்கள் மற்றும் தலைவர் பதவிகளை ஒதுக்கியது. மசோதாக்கள் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இப்போது நாடு முழுவதும் பஞ்சாயத்துகள் மற்றும் நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் 15 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- செப்டம்பர் 12, 1996 அன்று, அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 81வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெறத் தவறியதையடுத்து, கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. முகர்ஜி குழு தனது அறிக்கையை 1996 டிசம்பரில் சமர்ப்பித்தது. இருப்பினும், மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது.
- இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான NDA அரசாங்கம் 1998 இல் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை 12வது மக்களவையில் முன்வைத்தது. இருப்பினும், இந்த முறையும், மசோதா போதிய ஆதரவை பெறவில்லை. பின்னர் 1999, 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ் மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த மசோதா வெற்றி பெறவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா மன்மோகன் சிங் தலைமையிலான UPA அரசாங்கம்-1 காலத்தில், மீண்டும் கவனம் பெற்றது. 2004 ஆம் ஆண்டில், இந்த மசோதாவை பொது குறைந்தபட்ச திட்டத்தில் சேர்த்த அரசாங்கம், 6 மே 2008 அன்று மசோதா காலாவதியாகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 1996 கீதா முகர்ஜி கமிட்டியின் ஏழு பரிந்துரைகளில் ஐந்து இந்த மசோதாவின் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
- இந்த சட்டம் மே 9, 2008 அன்று நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு தனது அறிக்கையை டிசம்பர் 17, 2009 அன்று சமர்ப்பித்தது. பிப்ரவரி 2010 இல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முத்திரை கிடைத்தது. இறுதியில் இந்த மசோதா மார்ச் 9, 2010 அன்று பெருவாரியான ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- இருப்பினும், இந்த மசோதா மக்களவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை, இறுதியில் 2014 இல் மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது. ஆனால், ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட / நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் காலாவதியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.