பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாட்னாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் மற்றும் ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சந்தா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர். இதில் தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சி சந்திரசேகர ராவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி,தெலுகு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் வெற்றியைப் பதிவு செய்தால், நாடு முழுவதும் வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களின் மெகா கூட்டத்திற்கு முன்னதாக பாட்னாவில் கட்சி தொண்டர்களிடம் பேசுகையில், “அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற, அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு, வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும். காங்கிரஸ் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளில் இருந்து பீகாரை பிரிக்க முடியாது. பீகாரில் வெற்றி பெற்றால், நாடு முழுவதும் வெற்றி பெறுவோம்,'' என குறிப்பிட்டார். 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான பாதையை வகுப்பதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, கர்நாடகாவில் நடந்தது என்ன என்று அனைவருக்குமே தெரியும். இனி பா.ஜ.க ஆட்சி எந்த மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்றாது என தெரிவித்தார்.