பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக இன்று எதிர்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 






பாட்னாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி  தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் மற்றும் ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர்  ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சந்தா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜிர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர்.


இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல் காந்தி, ”கர்நாடகா தேர்தலில் என்ன நடந்தது என்று அனைவருக்குமே தெரியும். பா.ஜ.க தரப்பில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை சந்தித்து, ஆட்சியை கைப்பற்றியது. அதுபோல் தான் தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெரும். இனி பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களை பார்க்க முடியாது. காங்கிரஸ் ஏழை, எளிய மக்களுடன் இணைந்து நிற்கிறது. ஆனால் பா.ஜ.க ஓரு சில நபர்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது” என கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் சித்தாந்தங்களின் போர் நடப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒருபுறம் காங்கிரஸின் பாரத் ஜோடோ சித்தாந்தம் (barat jodo ideology), மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். -  பாஜகவின் barat todo ideology (கிண்டல் செய்யும் விதத்தில் கூறியுள்ளார்). பீகார் மக்களின் மரபணுவில் காங்கிரஸ் சித்தாந்தம் உள்ளது, அதனால்தான் இங்கு கூடியிருக்கிறோம். பாரத் ஜோடோ யாத்ராவுக்கு பீகார் மக்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அனைத்து மாநிலங்களிலும் பீகார் மக்கள் பாரத் ஜோடோ யாத்திராவில் பங்கேற்றனர். இதற்கு காரணம் பீகார் மக்கள் காங்கிரஸ் சித்தாந்தத்தில் நம்பிக்கையுடன் இருப்பது தான். வெறுப்புவாதத்தை வெறுப்புவாதத்தால் வெல்ல முடியாது. அன்பால் மட்டுமே முடியும். அதனால்தான் இன்று அனைத்து எதிர்கட்சியினரும் ஒன்று கூடியுள்ளோம்" என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.