திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பாதயாத்திரை சென்ற குழுவில் இருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பணக்கார கடவுள்களில் ஒருவராக உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்களுக்காக இலவச தரிசனம், சிறப்பு கட்டண தரிசனம், விஐபி தரிசனம் ஆகிய வசதிகள் மூலம் எளிதாக ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நடைபாதையாக வழியாக வரும் பக்தர்கள் காத்திருக்காமல் விரைந்து தரிசனம் செய்யும் வசதியும் தேவஸ்தானம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அடோனில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நேற்று இரவு புறப்பட்டது. இந்த குழு ஏழாவது மைல் அருகே வந்த போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குழுவில் இருந்த நான்கு வயது சிறுவன் கௌசிக்கை தாக்கியது. இதனால் அலறிய அச்சிறுவனை காட்டுக்குள்ளும் தலைமுடியை கவ்வி இழுத்துச் சென்றது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குழுவினர், உடனடியாக உள்ளூர் வியாபாரிகள் மற்றும் அருகில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். டார்ச்லைட், கற்களை வீசியும், ஒலி எழுப்பியும் சிறுவனை மீட்க முயன்றனர். பொதுமக்களின் செயல்களை கண்டு பயந்து போன சிறுத்தை வனப்பகுதியில் உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் பின்னால் விட்டுச் சென்றது. உடனடியாக கௌசிக்கை மீட்ட பாதுகாப்பு படையினர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
சிறுத்தை தாக்கியதில் சிறுவனின் காது, கழுத்தில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிறுவன் மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.