பீகாரில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு மத்தியில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார்.


எதிர்க்கட்சிகளின் கூட்டம்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த, எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதனடிப்படையில் தான், இன்று பாட்னாவில் நடைபெற்று வரும் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


அமித் ஷாவை சந்தித்த கேசிஆர் மகன்:


இந்த நிலையில் தான், உள்துறை அமைச்சரான அமித் ஷாவை, தெலங்கானா முதலமைச்சரான கே.சி. சந்திரசேகர ராவின் மகனும், அமைச்சருமான கே.டி. ராமா ராவ் டெல்லியில் சந்தித்துள்ளார். சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயல் தலைவராகவும் உள்ள ராமா ராவ், இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அமித் ஷாவை தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங்கை சந்திக்கவும் ராமா ராவ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பாஜக - சந்திரசேகர ராவ் மோதல்:


பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தெலங்கானாவில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததில் இருந்தே சந்திரசேகர ராவிற்கும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. பிரதமர் மோடியே ஐதராபாத்திற்கு வந்தாலும், அவரை நேரில் சென்று வரவேற்பதை சந்திரசேகர ராவ் தவிர்த்து வந்தார். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 5 முறை பிரதமர் மோடி தெலங்கானா வந்திருந்தாலும், ஒருமுறை கூட அவரை சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்றதில்லை. ஆளுநர் தமிழிசை பாஜகவின் பிரதிநிதி போல் செயல்படுவதாக நீதிமன்றத்திலேயே வழக்கை தொடர்ந்து இருந்தார்.


தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ்:


இதனிடையே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் சந்திரசேகர ராவ் களமிறங்கினார். இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்தார். அதைதொடர்ந்து, தேசிய அரசியலில் கால் பதிக்கும் விதமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எனும் தனது கட்சியை பாரதிய ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றம் செய்தார். இதனால், நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சந்திரசேகர ராவ் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 


அடிபணிந்தாரா சந்திரசேகர ராவ்?


இந்த சூழலில் தான் யாரும் எதிர்பாராத விதமாக சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ், பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்துள்ளார். நிதிஷ் குமார் நாடு முழுவதும் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வந்தாலும், சந்திரசேகர ராவை மட்டும் புறக்கணித்தார். இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் தான் அவர் பாஜக பக்கம் சாய்வதாக கூறப்படுகிறது. அதோடு, டெல்லி மதுபான ஊழல் விவகாரத்தில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலக்கத்துறையின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளார். அதிலிருந்து தனது மகளை காப்பாற்றுவதற்காகவும், சந்திரசேகர ராவ் பாஜக கூட்டணிக்கு செல்ல விரும்புவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கரையும் எதிர்க்கட்சிகள் கூட்டணி:


அண்மையில் தான் ஆந்திர முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரான மாயாவதியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை புறக்கணித்துள்ளார். அந்த வரிசையில், தெலங்கானா முதலமைச்சரும் பாஜக கூட்டணிக்கான நகர்வுகளை முன்னெடுத்துள்ளார். ஏற்கனவே கர்நாடகாவில் பாஜக வலுவாக உள்ள நிலையில் தற்போது தென்னிந்தியாவை சேர்ந்த மேலும் இரண்டு மாநிலங்களின் முக்கிய கட்சிகளும் பாஜக உடன் கூட்டணி சேர முனைப்பு காட்டி வருகின்றன. இதனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைக்கு திட்டம் செயல் வடிவம் பெறுவதற்கு முன்பாகவே, வீழ்ச்சி கண்டுவிட்டதாக பாஜக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.