கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மரண அடி கொடுத்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
காங்கிரஸ் அபார வெற்றி:
கர்நாடகா மாநில தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. மாநில தேர்தல் நடைபெற்ற பின் பல நிறுவனங்கள் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு மும்மரமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் ஒருவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்தது 113 இடங்கள் வெற்றி பெற வேண்டும்.
மதியம் 3 மணி நிலவரப்படி 224 தொகுதிகளில் 137 தொகுதிகள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ராஜஸ்தான் சத்தீஸ்கர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துள்ளது.
விலைக்கு போன எம்.எல்.ஏக்கள்:
இந்தியாவில் பல மாநிலங்களில் ஆளும் அரசின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, அரசியல் உள்ளடி வேலைகள் செய்வதை பாஜக கடந்த சில ஆண்டுகளாக கையில் எடுத்து வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அங்கு கடந்த கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
ஆனால் 2 சுயேட்சை, கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள், அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் 117 ஆக இருந்த கூட்டணி அரசின் பலம் 101 ஆக குறைந்தது. அதேசமயம் 105 எம்எல்ஏக்கள் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக, முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவி விலக வேண்டும். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதன்பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிந்தது. பாஜக ஆட்சி அமைத்தது. முதலில் எடியூரப்பாவும், பின்னர் பசவராஜ் பொம்மையும் இந்த ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராக இருந்தனர்.
50 அறைகளை முன்பதிவு செய்த காங்கிரஸ்:
இதுபோன்ற சூழலில் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுதல் அல்லது பாஜக விலை பேசும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற நிலையில் காங்கிரஸ் தரப்பில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 130 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்தால் ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏக்கள் விலைக்கு போகாமல் இருக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.