Congress Manifesto : கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது. ஏற்கனவே, இளைஞர்கள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோருக்கு வாக்குறுதிகளை வெளியிட்டுவிட்டது.
அதன் தொடர்ச்சியாக, விவசாயிகளுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வரும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை:
ஏற்கனவே அறிவித்ததுபோல குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதற்கான சிறப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் வகுத்த பார்முலாவின்படி, குறைந்தபட்ச ஆதரவு நிலை நிர்ணயிக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
விவசாயிகள் கடன் தள்ளுபடி:
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும், எந்தளவுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யவும் ஒரு நிலையான விவசாய கடன் தள்ளுபடி ஆணையம் அமைக்கப்படும்.
பயிர் இழப்புக்கு நிதி உதவி:
விவசாயிகளுக்கு பயிர் இழப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (PM Fasal Bima Yojana) திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்படும்.
இறக்குமதி - ஏற்றுமதி கொள்கை:
விவசாயப் பொருட்களுக்கான இறக்குமதி-ஏற்றுமதிக் கொள்கை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். விவசாயிகளின் நலன்கள் மற்றும் பிரச்னைகளை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இது நிலையானதாகவும், கணிக்கக்கூடியதாகவும், விவசாயிகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி இல்லை:
விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. விவசாயப் பொருள்கள் மீதான வரி விதிப்பில் இருந்து விடுபட ஜிஎஸ்டி முறை திருத்தம் செய்யப்படும்.
இதையும் படிக்க: Rahul Gandhi: தனி பட்ஜெட், பாஜக சட்ட திருத்தங்கள் வாபஸ்.. பழங்குடிகளுக்கு 6 வாக்குறுதிகள்.. ராகுல் காந்தி செம்ம அறிவிப்பு!