தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்கள் பதவியை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.
பரபரப்பை கிளப்பிய தேர்தல் ஆணையர்கள் விவகாரம்:
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என தகவல் வெளியிட்டார். இதுதொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படாத நிலையில், இருவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்வதற்கான குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதி நீக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "இந்தக் கமிட்டியில் இந்திய தலைமை நீதிபதி இருந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம், கூட்டத்தை சம்பிரதாயமாக குறைத்து விட்டது. குழுவில் அரசுக்கு பெரும்பான்மையாக உள்ளது. அவர்கள் நினைத்தது நடக்கும்.
தேர்தல் ஆணையர்களை இறுதி செய்வதற்கு பெயர் பட்டியலைக் கேட்டிருந்தேன். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் நள்ளிரவில் டெல்லி சென்றடைந்தேன். கூட்டம் இன்று மதியம். எனக்கு 212 பெயர்கள் வழங்கப்பட்டன. ஒரு நாளில் இவ்வளவு விண்ணப்பதாரர்களை ஒருவர் எப்படி பரிசோதிக்க முடியும்? சந்திப்புக்கு பத்து நிமிடங்களுக்கு முன், எனக்கு 6 பெயர்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டது.
காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு:
இருவரை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டனர் என்பதே உண்மை. இருப்பினும், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் நான் உரிய முறையில் அதில் தலையிட முயற்சித்தேன். அதனால்தான், நான் டெல்லிக்கு வருவதற்கு முன், தேர்தல் ஆணையர்களை இறுதி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களின் பட்டியலைத் கேட்டேன்.
212 பேர் கொண்ட பெயர் பட்டியலை அவர்கள் என்னிடம் கொடுத்தனர். ஒரே இரவில், 212 பேரின் பெயர்களை ஆய்வு செய்து அவர்களில் மிகவும் திறமையான நபரைக் கண்டுபிடிப்பது மனிதர்களால் சாத்தியமா என்பதை இப்போது நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் எனது எதிர்ப்பை பதிவு செய்தேன்" என்றார்.
தேர்தல் ஆணையராக பதவி வகித்த அருண் கோயல் ராஜினாமா செய்தது குறித்து கேள்வி எழுப்பிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "கோயல் நியமிக்கப்பட்ட போது, மின்னல் வேகத்தில் நியமனம் நடந்ததாக உச்ச நீதிமன்றம் கூறியது. மின்னல் வேகத்தில் வந்து டிஜிட்டல் வேகத்தில் அவர் ராஜினாமா செய்துவிட்டார்" என்றார்.