பெங்களூருவில் கொரோனா பாதித்தவர்களுக்கான மருத்துவமனை படுக்கைகள் ஒதுக்கீட்டில் மோசடி நிகழ்ந்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலையில் இந்த மோசடியில் தொடர்புடையவர்களாக 17 இஸ்லாமியர்களின் பெயர்களை பாரதிய ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.
ட்விட்டரில் வெளியான அந்த வீடியோவில் மோசடியில் தொடர்புடையவர்கள் என இஸ்லாமியர்களின் பெயர்களை வாசிக்கிறார் தேஜஸ்வி, உடனிருக்கும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் அதன்மீது மதரீதியான கருத்துக்களையும் பதிவு செய்கிறார்கள். இந்த வீடியோ பல்வேறு கட்சிகளிடையே வலுத்த எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. தேஜஸ்வி சூர்யாவின் இந்தச் செயலுக்கு வலுத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது கர்நாடக காங்கிரஸ் கட்சி. இதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த முறைக்கேட்டில் மொத்தம் 250 பேர் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கிரிஸ்டல் என்னும் நிறுவனத்தால் அவுட்சோர்சிங்கில் செய்யப்பட்டவர்கள். ஆனால் இவர்கள் பெயரை விடுத்து அதில் இருக்கும் இஸ்லாமியர்கள் பெயரை மட்டும் குறிப்பிடுவது வகுப்புவாதம். முதலில் தேஜஸ்வியின் இந்தப் பிரிவினைவாதத்துக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும்” என்று கருத்து கூறியுள்ளனர்.
இதுகுறித்துக் கருத்து பதிவு செய்துள்ள காங்கிரஸ் எம்.பி. சையது நாசீர் ஹுசைன், ‘மூன்றாம்தர, சாக்கடைத்தனமான புத்தி’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ப்ரிஜேஷ் கலப்பா கூறுகையில், ”இந்த மோசடி பற்றி பேசும் பாரதிய ஜனதா தலைவர்கள் மூன்று பேருமே குறிப்பிட்ட ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் தேஜஸ்வி சூர்யாவே அவரது ட்ரஸ்ட் வழியாக மருத்துவமனைகளில் மக்களுக்கு அதுவும் அவர் சமூகத்து மக்களுக்கான படுக்கை வசதிகளைச் செய்துதருகிறார். அப்போது அதுகுறித்து ஏன் யாரும் சாதிவாரியாக படுக்கை ஒதுக்கீட்டு மோசடி நடக்கிறது எனக் குரல் எழுப்பவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே இந்த மோசடியில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் ஒருவரையும் அவரது உறவினரையும் கைது செய்துள்ளது பெங்களூரு காவல்துறை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் பெங்களூரு சாம்ராஜ் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 பேர் மரணமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.