முதலமைச்சராக பதவியேற்றதும் முதன் முறையாக டெல்லிக்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையம், தமிழ்நாடு இல்லம் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.




நேற்று மாலை டெல்லி லோக் கல்யான் மார்க் சாலையில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக முதல்வர் ஸ்டாலின் அளித்த செய்திகள் எல்லாம் எல்லாம் ஊடகங்களிலும் வெளிவந்துவிட்டன. அதில், பிரதமரை ஸ்டாலின் சந்திக்கும்போது, பொன்னாடை போர்த்துவதும், பூங்கொத்து கொடுப்பதுமான புகைப்படங்களும் அடக்கம்.


ஆனால், வெளிவராத ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த ஒரு புத்தகம். ஆம் இன்று எப்படி சோனியா காந்திக்கு ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய Journey of a Civilization: Indus to Vaigai என்ற புத்தகத்தை தேர்வு செய்து வழங்கினாரோ அதேபோன்று, நேற்றும் பிரதமரிடம் ஒரு முக்கியமான புத்தகத்தை பரிசளித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அஜயன்பாலா எழுதிய ‘செம்மொழி சிற்பிகள்’ என்ற புத்தகம் தான் அது.


தனது மனுவில் 13வது பிரிவில் இடம்பெற்றிருந்த தமிழில் மொழி குறித்த கோரிக்கையில் தமிழை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கவேண்டும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மீட்டுத் தர வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘ செம்மொழி சிற்பிகள்’ என்ற இந்த புத்தகத்தை மிக நுட்பமாக தேர்ந்தெடுத்து பிரதமரிடம் வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.




உலகின் உயர்ந்த கலாச்சார பின்புலம் கொண்ட நம் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புக்கு காரணமான 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் நூல்கள் அவர்களின் உருவ சித்திரம் ஆகியவற்றுடன் உருவாக்கம் கொண்ட இந்த நூல், தமிழை போற்றி பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2010ல் கோவை செம்மொழி மாநாட்டிற்காக அப்போதைய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த பரிதி இளம் வழுதி முன்னெடுப்பால் தயார் செய்யப்பட்ட இந்த நூல், மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி கையால் வெளியிடப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. இப்போது பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள இதே ‘செம்மொழி சிற்பிகள்’ புத்தகத்தைதான் கடந்த 2018ஆம் ஆண்டு சோனியாகாந்தியின் பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசளித்தார் மு.க.ஸ்டாலின்.


தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகள் கொண்டுவரவேண்டாம் புத்தகங்கள் மட்டுமே கொடுங்கள் என்று அறிவுறுத்தியிருந்த ஸ்டாலின், தானும் முக்கியத் தலைவர்களை சந்திக்கும்போது புத்தகங்களை வழங்கி வருகிறார். இப்படி இந்த முறை பிரதமரிடம் தமிழின் முக்கியத்துவம் பற்றிய செம்மொழி சிற்பிகள் நூலையும், சோனியா காந்தியிடம் திராவிட பண்பாடு குறித்த Journey of a Civilization: Indus to Vaigai புத்தகத்தையும் வழங்கி, மிளிர்ந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.