அமெரிக்கா உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச்செல்லும் இந்திய மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், “தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய மாணவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமில்லை என அமெரிக்க அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் தடுப்பூசி கொள்கை மாறுபடுகிறது என்பதையும் நாங்கள் அறிவோம். அனைத்து வகையிலும், இந்திய மாணவர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். எந்தத் தடையுமின்றி, மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் விரைவாக செல்லவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அனைவரும் ஒன்றாக பணியாற்றினால் ஆக்கப்பூர்வமான தீர்வைக் காண முடியும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க தூதரகத்திலிருந்து அண்மையில் எழுத்துப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற தகுதிவாய்ந்த குடிபெயரவுள்ள ஆயிரக்கணக்கான விசா விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விசா நியமனம் முறைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதன் காரணமாக, ஆன்லைன் போர்ட்டல் முடங்கியது.
இதுதொடர்பாக, அமெரிக்க- இந்திய தூதரகம் தனது ட்விட்டரில், " ஜூலை, ஆகஸ்ட் மாதம் தொடங்கும் கல்வியாண்டில் சேருவதற்கு , ஜூன் 14-ஆம் தேதி முதல், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விசா நியமனங்களைப் பெற்றுள்ளனர். வரும் வாரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு விசா நியமனங்களை வழங்க உள்ளோம்" என்று பதிவிட்டது. மேலும்,தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க விடாமுயற்சியுடன் பணியாற்றிவருகிறோம் என்றும் தெரிவித்தது.
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி கேட்ட விண்ணப்பத்தை அமெரிக்காவின் உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (எப்.டி.ஏ) தள்ளுபடி செய்தது. உயிரியல் உரிம விண்ணப்பம் எனப்படும் முழு அனுமதிக்காக விண்ணப்பிக்க, ஆக்குஜென் நிறுவனம் கூடுதல் பரிசோதனையை நடத்திக்காட்ட வேண்டும் என்று எப்.டி.ஏ தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!
மேலும், உலக சுகாதார நிறுவனம் நிர்வகிக்கும் அவசர கால மருத்துவப் பயன்பாடு பட்டியலிலும் கோவாக்சின் தடுப்பூசி இடம்பெறவில்லை.
முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. தற்போது பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு, ரஷியா நிறுவனத்தின் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டிற்கு தேசிய கட்டுப்பாட்டாளர் (இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர்) அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.