5 State Election: தேர்தல் நடைபெறும ஐந்து மாநிலங்களில் 1,760 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


ஐந்து மாநில தேர்தல்:


அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு செமி பைனலாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது.  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும தேர்தல் என்பதால் இதில்  வெற்றி பெறவே அனைத்து  அரசியல் கட்சிகளும் முயல்கின்றன.  காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆளும் தெலங்கானா, மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் தொடங்கியது.


இதில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோதரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  ஐந்து மாநில தேர்தலின் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.  தேர்தலை முன்னிட்டு ஐந்து மாநிலங்களிலும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.  


 ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்


இதனையடுத்து, பிரதான கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. அந்தந்த மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம், நகை, மதுபானம் உள்ளிட்டவற்றை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இந்நிலையில், தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் 1,760 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ”தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐந்து மாநிலங்களில் ரூ.1760 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சத்தீஸ்கர் மாநிலத்தில் 76.9 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப் பொருள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மத்திய பிரசேத மாநிலத்தில் 323.7 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப் பொருள்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


அதேபோல, மிசோரத்தில் 49.6 கோடி ரூபாயும், ராஜஸ்தானில் 650.7 கோடி ரூபாயும், தெலங்கானாவில் 659.2 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே, போதைப் பொருட்கள், பணம், பரிசுப்பொருட்கள், நகைகள் என மொத்தம் ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, மிசோரமில் பணம், விலைமதிப்பற்ற உலோகம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் ரூ.29.82 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


மேலும், இது 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற் தேர்தலின்போது ரூ.239.15 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதைவிட 7 மடங்கு (ரூ. 239.15 கோடி) அதிக மதிப்புள்ள பொருட்கள் இம்முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றும் தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.