சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது காவர்தா மாவட்டம். இந்த மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு சிறுமி கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி தெருநாய் கடித்தது. கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த 7 வயது சிறுமி அதே ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுமிக்கு தொடக்கத்தில் சிறிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாய் கடித்து உயிரிழந்த 7 வயது சிறுமி:
7 வயதே ஆன தனது மகளின் இழப்பால் அவரது பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். பின்பு, தன்னுடைய மகளின் உயிரிழப்புக்கு போட்லாவில் உள்ள இழப்பீடு கோரி போட்லாவில் உள்ள வருவாய் பிரிவு அதிகாரிக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், அம்மாநில வருவாய் பிரிவு விதிப்படி தெருநாய் கடித்து உயிரிழந்ததற்கு இழப்பீடு வழங்க முடியாது என்று அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு தக்க இழப்பீடு வழங்கக்கோரி சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
நீதிமன்ற விசாரணை:
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. உயிரிழந்த சிறுமியின் தந்தையின் வழக்கறிஞர், உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று வாதாடினார். மேலும், கவனக்குறைவாக இருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து தெருநாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தத் தவறியதால், மனுதாரருக்கு இழப்பீடு வழங்க உரிமை உண்டு என தந்தையின் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
மற்றொரு வழக்கில் தெருநாய் கடியால் மனைவியை பறிகொடுத்த ஒருவருக்கு உயர்நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை மேற்கோள் காட்டி வாதாடினார். ஆனால், அவரது வாதத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் அரசு வருவாய் சுற்றறிக்கையில் தெருநாய் கடித்தோ அல்லது ரேபிஸ் நோய் உயிரிழப்பிற்கோ இழப்பீடு வழங்க எந்த அறிவுறுத்தலும் இல்லை என்று வாதாடினார்.
6.5 லட்சம் இழப்பீடு:
மேலும், அவர் தனது வாதத்தில் சம்பவத்தின்போது பள்ளி முடிந்து சிறுமி வீட்டிற்கு தனியாக வந்து கொண்டிருந்ததாகவும், பெரியவர்கள் யாரும் துணைக்கு செல்லவில்லை என்பதால் இந்த அசம்பாவிதம் அரங்கேறியதாகவும் வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், ஒரு குழந்தையின் அகால மற்றும் இயற்கைக்கு மாறான மரணம் பணத்தின் அடிப்படையில் மதிப்பிடவோ அல்லது ஈடுசெய்யவோ முடியாது. ஏனெனில் இது பெற்றோருக்கும், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் நிரந்தர துக்கம். இத்தகைய இழப்பு நிச்சயமாக மன வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் என்றனர்.
மேலும், உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கு இழப்பீடாக ரூபாய் 6.5 லட்சம் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 5 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மகளின் உயிரிழப்பிற்கு தந்தைக்கு இழப்பீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக நாட்டில் தெருநாய்கள் கடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Cyber crime: டாஸ்கை முடிக்க சொல்லி டாட்டா காண்பித்த ஆன்லைன் மோசடி கும்பல் - ரூ. 3 லட்சத்தை இழந்த இன்ஜினியர்
மேலும் படிக்க: Crime: நெல்லை அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது; ஜாதிய படுகொலையா...? - போலீஸ் விளக்கம்