நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்த 19 வயது இளைஞர் முத்தையா. சங்கனான்குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டம் இட்ட மொழி ஊரைச் சேர்ந்த சுதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் சுதாவின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் தனது நண்பர் கார்த்தி என்பவருடன் செல்போனில் பேசிக்கொண்டே தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே வந்த முத்தையா இரவு 9:30 மணி ஆகியும் வீட்டுக்கு வராததால் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் முத்தையாவின் சகோதரர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து உள்ளனர். அப்போது காரம்பாடு  ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து, வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம்  குறித்து திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் முத்தையாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  இந்நிலையில் நெல்லை எஸ் பி சிலம்பரசன், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.



இச்சூழலில் இந்த கொலைச் சம்பவத்திற்கு மாற்று சமுதாயத்துப் பெண்ணை காதலித்தது தான் காரணம் எனவும் இந்த கொலை ஆணவ படுகொலை எனவும் கூறி உயிரிழந்த நபர் முத்தையாவின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்த முத்தையாவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.  இது ஒருபுறமிருக்க போதை பொருட்கள் பயன்படுத்திய போது நடந்த வாக்குவாதம் காரணமாக முத்தையா உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். காதல் விவகாரமா? போதை பொருள் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முத்தையா கடைசியாக பேசிய கார்த்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள காட்டுப்பாதையில் இருவரும் மது அருந்திக்கொண்டிருந்த போது சுரேஷ் என்பவர் தனது தங்கை சுதாவை கேலி செய்ததாக முத்தையாவிடம் தகராறு செய்ததோடு பிரகாஷ், மதியழகன் ஆகியோர் சேர்ந்து முத்தையாவை கத்தியால் குத்தி உள்ளனர். அதனை தடுக்க முயன்ற கார்த்திக்கும் காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.  இந்த நிலையில் தான் இந்த கொலை தொடர்பாக சுரேஷ், மதியழகன், பிரகாஷ் ஆகிய 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது ஜாதிய படுகொலை என்று உறவினர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் காவல்துறையினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். அதில் திசையன்விளை காவல்நிலைய சரகம் அப்புவிளை, சாமிதாஸ் நகரை சேர்ந்த பலவேசம் மகன் கன்னியப்பன் என்பவர் 23.07.2023 - ம் தேதி இரவு திசையன்விளை காவல்நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகார் மனுவில், தனது மகன் முத்தையா வேறு சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாகவும், 23.07.2023 - ம் தேதி அன்று இரவு தனது மகன் ஓடக்கரை பாலம் அருகில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும், தனது மகன் காதலித்த பெண்ணின் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஜாதி வெறியில் கொலை செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க கேட்டு கொடுத்த மனுவின் பேரில் உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இவ்வழக்கு சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  யோகேஷ்குமார் அவர்கள் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினரின் விசாரணையில், இறந்து போன முத்தையா என்பவர் அப்புவிளையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்ததாகவும், அதனை அவரது தங்கை சுரேஷிடம் சொல்லி அழுதுள்ளதாகவும். ஏற்கனவே சுரேஷின் தங்கை இறந்த முத்தையாவின் உறவினரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வருவதாகவும், இதனால், ஒரு மாதத்திற்கு முன்பு சுரேஷ் முத்தையாவை எச்சரித்துள்ளார். அதன் பின்பும் 22.07.2023 - ம் தேதி மதியம் சுரேஷின் தங்கையை முத்தையா கிண்டல் செய்து தன்னை காதலிக்க வற்புறுத்தியதாகவும். அதனை அவரின் தங்கை சுரேஷிடம் அழுது கொண்டே சொன்னதாகவும், இதனால் அவன் உயிருடன் இருக்கும் வரை தங்கையிடம் பிரச்சனை செய்து கொண்டிருப்பான் என்று எண்ணி தனது உறவினர்களான மதியழகனிடமும், ஜெயபிரகாஷிடமும் தெரிவித்து மூவருமாக சேர்ந்து 23.07.2023 - ம் தேதி இரவு சம்பவ இடத்தில் சென்றபோது முத்தையாவும் அவன் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததாகவும், முத்தையாவிடம் சென்று சுரேஷ் தனது தங்கையை கிண்டல் செய்தது பற்றி கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டதாகவும். அவர்கள் மூவரும் தாக்கியதில் முத்தையாவுடன் நின்றிருந்த அவரது நண்பர் சிறு காயத்துடன் ஓடி விட்டதாகவும், முத்தையாவிற்கு குத்து காயங்கள் ஏற்பட்டு இறந்ததாகவும், தெரியவந்தது.


இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில் இவ்வழக்கில் மரணமடைந்தவரும் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுக்கிடையிலான தாழ்த்தப்பட்ட விரோதத்தின் காரணமாக இக்கொலை நடைபெற்றுள்ளது தெரிய வருகிறது. கொலையுண்ட நபரின் தந்தை கன்னியப்பன் என்பவர் அவரது மனுவில் தனது மகனின் மரணம் ஜாதிய வெறியில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருப்பினும் விசாரணையில் இது ஜாதிய படுகொலை இல்லை என தெரிய வருகிறது என விளக்கம் அளித்துள்ளனர்.