கனமழையால் தெலுங்கானாவில் முழு கொள்ளளவை எட்டிய கடம் அணை திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


மத்திய மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ஐதரபாத் உட்பட கமரெட்டி, மேடக், சூர்யாபேட், கம்மம், சங்கரெட்டி, விக்ரபாத், நல்கொண்டா, கன்பூர், சேத்கால், பாகர்கூடர், ரேகொண்டா பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. 


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் 616.5 மி.மீ மழையும், முலுகு மாவட்டத்தில் 533.5 மி.மீ மழையும், பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2014ம் ஆண்டு ஜூலை மாவட்டம் முலுகு மாவட்டத்தில் அதிகபட்சமாக  517 மி.மீ மழை பதிவாகி இருந்தது. முலுகு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்புக்குழு விரைந்துள்ளது. இதேபோல் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கடம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 700 அடி கொண்ட அணையில் 697 அடிக்கு மழைநீர் நிரம்பியுள்ளதால் அணையின் 14 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன். இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் என்பதால், தாழ்வான பகுதிகளிலும், அணையின் கரையோர பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


நேற்று முலுகு மாவட்டத்தில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் சுற்றுலா சென்ற 160 பேர் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு விரைந்த  தேசிய மீட்புக்குழு பாதிக்கப்பட்ட 160 பேரையும் இன்று அதிகாலை 4 மணியளவில் மீட்டனர். ஒருசில இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் பர்கல் மற்றும் பூபாலப்பள்ளி இடையே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. 


பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருசில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகள் திறக்கப்படுவதால் கோதாவரி ஆற்றின் நீரின் அளவு 50.50 அடி உயர்ந்துள்ளது. இதனால் இரண்டாவது முறையாக கோதகுடம் மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பனிகளை துரிதப்படுத்தியுள்ள மாநில அரசு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரித்துள்ளது.