உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச்சில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில், பெண் குழந்தையிடம் ஆசிரியர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் பெண் குழந்தையிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர்
அந்த வீடியோவில், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தையிடம் ஆசிரியர் தகாத செயல்களில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. இந்த வீடியோவை சம்பவ இடத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரகசியமாக பதிவு செய்து பின்னர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாக ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, இது குறித்து விசாரணையைத் தொடங்கினார். இந்த வீடியோ சுமார் ஒரு வாரம் முன்னர் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை காவல்துறையில் முறையான புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
பள்ளி மற்றும் ஆசிரியர் பெயர்
பஹ்ரைச்சில் உள்ள விஷேஷ்வர்கஞ்ச் விகாஸ் காண்டின் கீழ் உள்ள ஷிவ்பூர் பைராகி தொடக்கப் பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த செயலை செய்த காமுகர் பெயர், துர்கா பிரசாத் ஜெய்ஸ்வால் என்றும், அவர் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார் என்றும் கூறப்படுகிறது. அவர் அவரது வகுப்பில் படிக்கும் ஒரு பெண் குழந்தையை தனது மேசைக்கு அருகில் அழைத்து, தகாத நடத்தையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தை சம்பந்தப்பட்ட நபர் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்
சமீப காலமாகவே ஆசிரியர் தனது வகுப்பறையில் சட்டைகளை கழற்றிவிட்டு படுத்திருப்பதாகக் கூறி அவரது நடத்தை குறித்து கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், துர்கா பிரசாத் சில மாதங்களாக பள்ளியில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இந்த விடியோ வெளியான பிறகு செய்திகள் பல வெளியாகியுள்ளன. ஆறு மாதங்களுக்கு முன், இதுபோன்ற புகார்கள் அளிக்கப்பட்டும், அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறபபடுகின்றது.
விவேகமாக செயல்பட்ட கிராமத்தை சேர்ந்த நபர்
நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத காரணத்தால், ஆசிரியரின் செயல்கள் குறித்த உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தும் முயற்சியில், கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், ஆசிரியரின் நடத்தையை வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த ஆதாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், சம்பந்தப்பட்ட பெற்றோர் உடனடியாக ஆசிரியரின் தவறான நடத்தைக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர் துர்கா பிரசாத் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கல்வி அதிகாரி மன்மோகன் தெரிவித்தார். "அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு அவர் மீதும் வழக்கு தொடரப்படும்," என்றார். இதற்கிடையில், ஏஎஸ்பி, குன்வர் கியாஞ்சய் சிங், எழுத்துப்பூர்வ புகார் எதுவும் இதுவரை வரவில்லை என்று கூறினார். மேலும் எழுத்துப்பூர்வ புகார் கிடைத்ததும், உடனடியாக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.