மத்திய பிரதேசத்தின் குனோ பாலம்பூர் உயிரியல் பூங்காவிற்கு தென்னாப்பிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுராஜ் என்ற சிவிங்கிபுலி உயிரிழந்தது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களில் 3 குட்டிகள் உட்பட 8 சிவிங்கி புலிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு சிவிங்கி புலிகள் எண்ணிக்கை 11-ஆக சரிந்துள்ளது.
இந்த சிவிங்கி புலி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த சிவிங்கி புலி காலை 6:30 மணியளவில் பால்பூர் கிழக்கு மண்டலத்தின் மசவானி பகுதியில் மந்தமான நிலையில் இருந்ததை கண்காணிப்பு குழுவினர் கண்டறிந்தனர். அந்த குழுவினர் அதன் அருகில் செல்ல முயன்றபோது, அந்த சிவிங்கி புலி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
சிவிங்கி புலியின் நிலை குறித்து கண்காணிப்புக் குழு, பால்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வயர்லெஸ் மூலம் உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் வனவிலங்கு மருத்துவக் குழுவினர் மற்றும் வட்டார அலுவலர்கள் காலை 9 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் அதன் இருப்பிடத்தைக் சென்றடைந்த போது, அந்த சிவிங்கி புலி அங்கு இறந்து கிடந்தது” என்று வனவிலங்கு அதிகாரி ஒருவர் கூறினார்.
கழுத்து மற்றும் முதுகில் இருந்த காயங்கள் தான் மரணத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் இறப்புக்கான காரணம் குறித்து, வனவிலங்கு மருத்துவர்கள் குழுவால் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கட்டுப்பாடு இல்லா வேட்டை உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை குறைந்து, 1950-களில் அழிந்தே விட்டது. இந்நிலையில், சிவிங்கி புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. சிவிங்கி புலிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளில் ஒன்றான உதய் என்ற ஆறு வயது ஆண் சிவிங்கி புலி குனோ தேசிய பூங்காவில் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது. கடந்த மே 9ஆம் தேதி தஷா என்ற சிவிங்கி புலி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க