Maaveeran Review in Tamil: மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’ . இந்தப் படத்தில் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.


படத்தின் கதை 


பிரச்சினையில் இருந்து மக்களை காக்க போராடுபவனே உண்மையான மாவீரன் என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும்.


சென்னையில் காலம் காலமாக வசிக்கும் பூர்வகுடி மக்கள் வளர்ச்சிக்காக நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு "மக்கள் மாளிகை" அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படுகிறார்கள். ஊழலின் ஊற்றாக, அடுத்த நொடி உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் அந்தக் குடியிருப்பில் தினம் தினம் பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் போகாமல் எதையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழும் தைரியம் இல்லாத காமிக்ஸ் வரைபட கலைஞரான சிவகார்த்திகேயன், ஒரு பிரச்சினையில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது தனக்கு கிடைத்த சூப்பர் பவரை கொண்டு அந்தத் துறை அமைச்சராக வரும் மிஷ்கினுடன் தைரியமாக மோதுகிறார்.


மக்கள் அவரை மாவீரனாக பார்க்கிறார்கள். சூப்பர் பவரை கொண்டு சிவகார்த்திகேயன் மாவீரனாக அவர் மக்களை காத்தாரா? இல்லை மக்களுக்கான உரிமைப் போரில் தோற்றாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.


நடிப்பு எப்படி?


வழக்கமாக நம்ம வீட்டுப்பிள்ளையாக கலகலப்பாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் சிவகார்த்திகேயன் நம்மை கவர்கிறார். அவருக்கு அடுத்து ‘எடுப்பார் கைப்பிள்ளை’யாக இருக்கும் அமைச்சர் மிஷ்கினின் கேரக்டர் ரசிக்க வைக்கிறது.  ஆனால் அவரின் வில்லத்தனம் வெறும் பில்டப் ஆகவே முடிகிறது. அதேபோல் யோகிபாபுவின் காமெடி காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் செய்திருக்கிறது. மற்றபடி சரிதா, அதிதி ஷங்கர் கேரக்டர்கள் கதைக்காக பயன்படுத்தப்பட்டாலும் பெரிய அளவில் காட்சிகள் இல்லை.


படம் எப்படி?


மண்டேலா படம் மூலம் ஓட்டின் முக்கியத்துவம் குறித்து பேசி கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின், இதில் பூர்வகுடி மக்களின் பிரச்சினையை பற்றி பேசியுள்ளார். ஆனால் அதனை அழுத்தமாக பேசாமல் முதல் பாதியில் காமெடியான திரைக்கதை அமைக்கப்படிருப்பதால் படம் பார்ப்பவர்களும் ஜாலி  மோடில் பிரச்சினையை பார்க்கிறார்கள்.


முதல் பாதி முழுக்க கலகலப்பான காட்சிகளுடன் பயணிக்கும் கதை, இரண்டாம் பாதியில் சீரியஸாக மாறினாலும் பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்பதே உண்மை. படத்தில் அசரீரியாக ஒலிக்கும் விஜய் சேதுபதியின் குரல் படத்தை இன்னும் சுவாரசியம் ஆக்கினாலும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.சாதாரணமாக ஒரு பவர் கிடைத்தாலே நாம் தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் மலையையும் புரட்டி விடுவார்கள்.


ஆனால் தனக்குள் இருக்கும் சூப்பர் பவரை பற்றி கடைசிவரை புரிந்து கொள்ளாமல் அதனை வைத்து மக்களின் பிரச்சினையை தீர்க்க வில்லனான மிஸ்கினை மிரட்ட முடியாமல், தன் உயிரை காக்க கெஞ்சி கொண்டிருப்பது நம்பும்படி இல்லை. சொல்லப்போனால் சிவகார்த்திகேயனின் கமர்சியல் இமேஜூக்காக இரண்டாம் பாதி திரைக்கதை எழுதப்பட்டுள்ளது என சொல்லலாம். அதேபோல் பரத் சங்கரின் பின்னணி இசை பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.


மக்களின் பிரச்சனையை என்ன செய்தால் சரி செய்யலாம் என சொல்லும் கதையாக இல்லாமல், கடைசி வரை பிரச்சனையை மட்டுமே இருப்பதை கூறுவதாக மாவீரன் படம் அமைந்துள்ளது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.  லாஜிக் பார்க்காமல் மாவீரன் பார்க்க சென்றால் ஒருமுறை ரசிக்கலாம். மொத்தத்தில் மாவீரன் பெயரில் மட்டும் தான்.. கதையில் இல்லை...!