அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு ஜூன் 21 ஆம் தேதி காலை 5 மணிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு ஆட்கொணர்வு மனு மீது இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரு நீதிபதிகளின் திர்ப்பு மாறுபடவே மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் அமர்வுக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும், அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்களது வாதத்தை முன்வைத்தனர். மேலும் ஜூலை 12 ஆம் தேதி செந்தில் பாலாஜியின் காவல் நிறைவு பெற முதன்மை அமர்வு நீதிமன்றம் காவலை நீடிக்கலாம் என கூறவே, ஜூலை 26 ஆம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டது.
இறுதிக்கட்ட வாதம்:
இருதரப்பினருக்கு இடையே காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி வாதம் நடத்தப்படும் என நீதிபதி சி.வி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இன்றைய விசாரணையில் பதில் வாதம் முன்வைத்த கபில் சிபில், “ அமலாக்கப்பிரிவுக்கு காவல்துறையினரின் அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் இதே துஷார் மேத்தா வாதிட்டுள்ளார். ஆனால் இங்கு அதற்கு மாறாக வாதிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியாது. ஏனென்றால் அமலாக்கத் துறையினர் காவல் துறை அதிகாரிகள் அல்ல. செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க அமலாக்க துறைக்கு முழு அதிகாரம் உள்ளது நீதிமன்ற காவலில், மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் ஆனால் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்று அமலாக்கத்துறை கூறுவது தவறானது. இதுதொடர்பாக அவர்கள் உயர்நீதிமன்றத்திற்கு சென்று விளக்கம் பெற்று இருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை ?” என கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
3 வது நீதிபதி சி.வி. கார்த்திகேயனின் தீர்ப்பு:
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சி.வி கார்த்திகேயன், தீர்ப்பை வழங்கினார். அதில், “ கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் கஸ்ட்டடியில் எடுக்க வேண்டியது அவசியம்” என கூறியுள்ளார். நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறிய காரணத்திலும் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் காவலில் எடுக்கலாம் எனவும், அதேபோல் சிகிச்சை நாட்களை நீதிமன்றம் நாட்களாக கருத முடியாது எனவும் கூறியுள்ளார்.
நிதிபதி சி.வி கார்த்திகேயன் கூறியது என்ன?
இறுதி வாதம் முடிந்த பின் தீர்ப்பை வாசித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன்,
- அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை எதிர்க்காத நிலையில், அதன் பின் நடக்கும் சோதனை, விசாரணை ஆகியவற்றை எதிர்க்க முடியாது.
- கைது சட்டபூர்வமானது தான். நீதிமன்ற காவலும் சட்டபூர்வமானது தான். எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
- இந்த விவகாரத்திலும் நீதிபதி பரத சக்கரவர்த்தியுடன் உத்தரவுடன் ஒத்துப் போகிறேன். கைதுக்கான காரணங்கள் செந்தில் பாலாஜிக்கு தெரியும். காலை முதல் அவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் இருந்துள்ளனர்.
- செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை நீதிமன்றம் நாட்களாக கருத முடியாது.
- சிகிச்சைக்கு பிறகு கஸ்ட்டடி எடுக்கலாம்.