கொரோனா தொடர்பான வதந்திகள், கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகள் என அடுத்தடுத்து முறியடித்த ஊடகங்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக வந்திருக்கும் அடுத்த சவால் கருப்பு பூஞ்சை தொடர்பான வதந்திகள். இந்தியாவில் தற்போது வரை 12,000-க்கு மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி வேகமாகப் பரவி வருகிறது.  இந்தியில் உள்ள அந்த வதந்தியில், ஃப்ரிட்ஜில் உள்ள கருப்பு நிறத்திலான பூஞ்சை, வெங்காயத்தின் மீதான கருப்பு நிறத்திலான பூஞ்சையுமே மனிதர்களுக்கு மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோயை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அது ஃப்ரிட்ஜ் முழுவதுமே கருப்புப் பூஞ்சையை உருவாக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் உண்மைத்தன்மையைக் கூட அறியாமல் பலரும் இதனை பரவலாக்கி வந்தனர்.

 

உண்மை என்ன?

 

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் உலாவரும் இந்தத் தகவல் முற்றிலும் பொய். அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (United States Centers for Disease Control and Prevention) இது தொடர்பாக முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஸ்டாச்சிபோட்ரிஸ் சேர்டாரம் (stachybotrys chartarum) என்ற கருப்பு நிற பூஞ்சையானது உடலில் ஒருசில தொற்றுகளை ஏற்படுத்தலாம். ஆகையால், ஃப்ரிட்ஜில் இந்தவகை பூஞ்சையைப் பார்த்தால் உடனே அப்புறப்படுத்துவது நல்லது. ஆனால், இவை நிச்சயமாக கருப்புப் பூஞ்சை பாதிப்பை ஏற்படுத்துவதல்ல.



 

ஃப்ரிட்ஜில் உள்ள கருப்பு நிறத்திலான பூஞ்சை பேக்டீரியாக்கள், ஈஸ்டால் உருவாகுகின்றன. இவை ஃப்ரிட்ஜில் உள்ள உணவுப் பொருட்களை கெட்டுப்போகச்செய்து அதன் மூலம் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துமே தவிர கருப்புப் பூஞ்சை நோயை ஏற்படுத்தாது என்பதே உண்மை. அதேபோல் வெங்காயத்தின் மீது பொடி போன்றிருக்கு கருப்பு நிறப் பூஞ்சையின் பெயர் ஆஸ்பெர்கிலஸ் நைகர் (aspergillus Niger). இது மணலிலும் தென்படும். இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர் கூறுகையில் மியூகோர்மைகோசிஸ் கருப்புப் பூஞ்சையே அல்ல. மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுவதால் தோலில் சில இடங்கள் கருப்பு நிறத்தில் மாறிவிடுவதால் பிளாக் ஃபங்கஸ் என்ற பெயர் வந்திருக்கிறது என்று விளக்கியது குறிப்பிடத்தக்கது. ஜபல்பூரில் உள்ள பூஞ்சை நோய்கள் ஆராய்ச்சி மையத்திப் மருத்துவர் சுரேஷ் ஆர் நவாங்கே கூறும்போதும், கருப்புப் பூஞ்சை மிகவும் அரிதாகவே பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். வெங்காயம் மட்டுமல்ல எந்த காய்கறியையும், பழத்தையும் நன்கு சுத்தப்படுத்தி பயன்படுத்துவது பொதுவாகவே நலன்கள் பயக்கும் என்றும் அவர் கூறினார்.