தனது குடும்பத்தை காப்பாற்ற, ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி பிஷ்ணுபிரியா ஸ்வைன் சோமாடோ நிறுவனத்தில் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கட்டாக் நகரின் முதல் சோமேட்டோ ஊழியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கொரோனா நோய்த் தொற்று காரணமாக இவரின் தந்தை  வேலையிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. 






இதுகுறித்து, பிஷ்ணுபிரியா கூறுகையில், "வீட்டின் அருகில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் யாரும் வகுப்பிற்கு வருவதில்லை. மேலும், என் தந்தைக்கும் வேலை பறிபோய் விட்டது. கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொண்டோம். எனது தனிப்பட்ட கல்வி செலவுக்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் சோமாடோ தளத்தில் சேர்ந்தேன்" என்று கூறினார்.



பிஷ்ணுப்ரியா


 


கட்டாக்கிலுள்ள ஷைலாபாலா பெண்கள் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் இவரின் கடின உழைப்பை அநேக மாக்கள் பாராட்டி வருகின்றனர்.       


பொருளாதார முடக்கம்: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.11 சதவீதமாகும். 2019-20 ஆம் ஆண்டுக்கான  வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.27 சதவீதமாகும். 1991ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5.55 சதவிகிதமாக இருந்தது. 



அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை போன்ற நாடுகளை விட இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது.  கொரோனா பெருந்தொற்று காரணமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நடவடிக்கைகளில் கடும் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. முடங்கிப்போயிருக்கும் பொருளாதாரத்தைத் திறந்துவிட்டால் பிரச்னையில் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்றும் ஆனால் முழுமையாக சிக்கல் தீர்ந்துவிடாது என்றும் கூறப்படுகிறது. இந்தியப் பொருளியல் கண்காணிப்பு மையம்- சி.எம்.ஐ.இ.-யின் முதன்மைச் செயல் அலுவலர் மகேஷ் வியாஸ் இது பற்றிக் கூறுகையில், “வேலையை இழந்தவர்கள் மீண்டும் இன்னொரு வேலையைப் பெறுவது கடினமானதுதான். இதே சமயம், அமைப்பாக்கப்படாத துறைகளில் பணியாற்றியவர்கள் ஓரளவுக்கு வேகமாக வேலையைப் பெற்றுவிட முடியும்; அமைப்பாக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுவோருக்கும் சிறந்த தரமான நிலையில் உள்ள வேலைகளை விரும்புவோருக்கும் இது காலம் பிடிக்கக்கூடியது. அதிகபட்சம் ஓர் ஆண்டுகூட ஆகலாம்” என்று தெரிவித்துள்ளார்.


வேலை இல்லை... சாப்பாடு இல்லை... சிலருக்கு உயிரும் இல்லை... தவிக்கும் தோல் தொழிற்சாலை பணியாளர்கள்!


இது ஒருபுறமிருக்க, 2020-21-ஆம் நிதியாண்டில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வரிக்குப் பின் இலாபம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6% ஆக அதிகரித்தது. 2014-15 நிதியாண்டிற்குப் பிறகு ( ஜிடிபி- யில் 3.1%) அதிகப்படியான வருவாய் வளர்ச்சியாகவும் இது இருந்தது. எனவே, கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகும், அநேக பெருநிறுவனங்கள் லாபங்களை சந்தித்துள்ளன என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.             


கார்ப்ரேட் வரியை ஓவர்டேக் செய்த வருமான வரி; பல ஆண்டுகளுக்கு பின் இது எப்படி நடந்தது?