அரசு அதிகாரிகள் எங்கள் செருப்புகளை சுமந்து செல்வதற்காகவே இருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் உமா பாரதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற இதர பிற்படுத்தப்பட்டோருக்கான நிகழ்வு ஒன்றில் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பாஜக முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதி கலந்துகொண்டவர் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களையும், அரசு அதிகாரிகளால் ஏன் ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடியாது என்றும் பேசினார்.
“ஒரு அறிவிப்பு அல்லது திட்டம் குறித்து அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளிடம் தான் தனியாக ஆலோசனை நடத்துவார்கள். எங்கள் ஆலோசனை பெற்ற பிறகே ஒவ்வொரு கோப்பும் நகரும். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை கட்டுப்படுத்துகிறார்கள் என்று சொல்வது முட்டாள்தனமானது. நான் 11 ஆண்டுகள் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்து இருக்கிறேன். எனக்கு அதன் நடைமுறைகள் எல்லாம் தெரியும்.
அரசு அதிகாரிகளுக்கு நாங்கள் தான் ஊதியம் வழங்குகிறோம். அவர்களுக்கான பணியிடங்களை நாங்கள் வழங்குகிறோம். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது பதவி குறைப்பு செய்வதும் எங்கள் கையில் தான் உள்ளது. அரசு அதிகாரிகளால் என்ன செய்துவிட முடியும். உங்களுக்கு எதுவும் தெரியாது. அதிகாரிகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதிகாரிகள் எங்களின் செருப்புகளை எடுத்து வருவதற்கு தான் இருக்கிறார்கள்.” என தெரிவித்து உள்ளார்.
அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அரசு நிர்வாகத்தை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்து வரும் அரசு அதிகாரிகள் குறித்து ஒரு முன்னாள் முதலமைச்சரே இப்படி பேசலாமா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். உமா பாரதியின் பேச்சால் கடும் அதிருப்தி அடைந்து உள்ள அரசு உயரதகாரிகள் இந்த பிரச்சனையை, அம்மாநிலத்தை ஆளும் பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானிடமும் கொண்டு சென்று உள்ளனர். உமா பாரதியின் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இந்த நிலையில், ட்விட்டரில் விளக்கமளித்து உள்ள உமா பாரதி “நான் பேசிய முழு வீடியோவை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி. அது ஒரு சாதாரண உரையாடல் மட்டுமே. நான் பேசியதன் ஒரு பகுதி மட்டுமே பகிரப்படுகிறது. நான் அரசு அதிகாரிகளுக்கு ஆதரவாகவே பேசினேன். அரசியல் தலைவர்களில் திறமையற்ற சிலர் உள்ளனர். அவர்கள் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு தங்கள் திறமையின்மையை மறைப்பதற்காக அரசு அதிகாரிகளை விமர்சிப்பார்கள். எனது அனுபவத்தில் நல்ல அரசு அதிகாரிகளை பார்த்துள்ளேன். அவர்கள், துணிச்சலான நல்ல தலைவர்களுக்கு எப்போது உறுதுணையாக இருப்பார்கள்.” என தெரிவித்து உள்ளார். இந்த ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடியையும் டேக் செய்து உள்ள உமா பாரதி, காட்டமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக வருந்துகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.