தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு வளையக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி பிச்சைக்கண்ணு (65). இவர் கடந்த 70 வருடமாக அதே பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். அவர் குடியிருந்து வந்த நாட்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவற்றிற்கு அரசு  விதிகளின்படி கட்டணம் செலுத்தி ரசீது பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்  பிச்சைக்கண்ணு வீட்டிற்கும் அருகில் குடியிருந்து வருபவர்கள் பிச்சைகண்ணு வீட்டிற்கு செல்லும் மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்களை கடந்த ஒன்றரை வருடமாக துண்டித்து விட்டனர்.இதனால் மின்சாரம் இல்லாமல், பெரும் அவதிக்குள்ளானார்.




இதுகுறித்து  பிச்சைக்கண்ணு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர், ஒரத்தநாடு தாசில்தார், மின்சாரத்துறை மற்றும் குடிநீர் வாரிய துறை  உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தள்ளாத வயதில், பலமுறை புகாரளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மிகவும் மனவேதனையடைந்த பிச்சைகண்ணு, உரிய பணம் செலுத்தி, வீட்டிற்கு வந்த மின்சாரத்தை, துண்டித்ததால், தினந்தோறும் பெரும் அவதிக்குள்ளாகி வருவது குறித்து எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாததால், இனிமேல், அங்கு குடியிருந்தால், எந்தவிதமான பயனும் இல்லை. அதனால் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், குடும்பத்துடன் குடியேறி விடலாம் என முடிவுசெய்தார்.


அதன்படி, பிச்சைக்கண்ணு அவரது மனைவி சமுத்திரம் மகள்கள் சசிகலா, வேம்பு அரசி, நதியா மற்றும் உறவினர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் வக்கீல் சந்திரசேகர் தலைமையிலும், மாநகர செயலாளர் வக்கீல் ராஜகுரு, ஒரத்தநாடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருணா சதீஷ் ஆகியோர் முன்னிலையிலும் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியமரும் போராட்டம் செய்வதற்காக திரண்டு வந்தனர். இவர்கள் நீதிமன்ற சாலையிலிருந்து புறப்பட்டு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.   




இதுகுறித்து, தகவலறிந்த தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான  போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக எழுதி கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து பிச்சைக்கண்ணு குடும்பத்தினர் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி தஞ்சை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சிவகுமாரிடம்  கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


இது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில்,


அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து பணம் செலுத்தி விட்டேன். அதற்கு உண்டான ரசீதும் உள்ளது. ஆனால் எனது வீட்டின் அருகிலுள்ளவர்கள், எனது வீட்டிற்கு வரும் மின்சாரததை, குடிநீரை துண்டித்து விட்டனர். மனிதனுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீரும், மின்சாரமும் தான். அதனை துண்டித்தது குறித்து, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் எனது குடும்பத்தினர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டதிற்கு வந்தோம். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் மனு அளித்துள்ளோம். எனது வீட்டிற்கு சென்ற மின்சாரம், குடிநீரை துண்டித்தை மீண்டும் இணைப்பு கொடுக்க வேண்டும், துண்டித்ததற்காக அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்