Breaking News Live : பூ ராமுவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 27 Jun 2022 09:38 PM
பூ ராமுவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திரைப்பட நடிகர் பூ ராமுவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்..

மாணவியர்களுக்கான ரூபாய் 1000 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழுவுக்கு, புதிய இடத்தை தேர்வு செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு புதிய இடத்தை தேர்வு செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக வானகரத்தில் நடைபெறும் நிலையில், தற்போது மீனம்பாக்கத்தில் நடத்துவதற்கு, இடத்தை தேர்வு செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்

அதிமுக கூட்டம் குறித்து நேற்றைய அறிக்கையிலே கூறிவிட்டேன்- விமான நிலையத்தில் ஓபிஎஸ்

சென்னை விமான நிலையத்தில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் குறித்து ஓபிஎஸ்-யிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேற்றைய அறிக்கையிலே கூறிவிட்டேன்  என தெரிவித்தார். நேற்றைய அறிக்கையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லத்தக்கதல்ல என குறிப்பிட்டிருந்தார்.

Breaking News Live : எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு வழக்குக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை, அறப்போர் இயக்கம், தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Breaking News Live : குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

Breaking News Live : அதிமுகவின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி தான் : ஜெயக்குமார் உறுதி

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை. அந்த ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டத்தை நடத்த தலைமை நிலைய செயலாளருக்கு உரிமை உண்டு எனவும் அவர் கூறியுள்ளார். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் நிறைய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதை வெளியில் சொல்ல முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

Breaking News Live : துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்...கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓ.பன்னீர்செல்வம் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அவர் துரோகத்தின் அடையாளம் எனவும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்ததை மறக்க முடியுமா எனவும் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். அதிமுக பொருளாளராக ஓபிஎஸ் நீடிப்பாரா என்பது குறித்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் தெரிய வரும் எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

Breaking News Live : அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் பேனரை தொண்டர்கள் கிழித்து வருகின்றனர்.

Breaking News Live : சென்னைக்கு புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேனிக்கு சென்றிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக தனது ஒப்புதலின்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

வெளியானது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

வெளியானது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ;+1 தேர்வில் 90.07% மாணவ மாணவிகள் தேர்ச்சி

Breaking News Live: அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கமா?

அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸை நீக்குவது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்.

Breaking News Live : கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 21 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 21 பேர் பலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Breaking News Live: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

Breaking News Live: அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் !

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

Breaking News Live : தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது- ஓபிஎஸ்

அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.

Breaking News Live : பரப்பரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை வெடித்துள்ள சூழலில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

Breaking News Live : தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முன்னணி- பிரதமர் மோடி

ஜெர்மனியிலுள்ள இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றினார். அதில் தொழில்நுட்ப 4.0 வளர்ச்சியில் இந்திய முன்னணியில் உள்ளதாக பெருமிதம் கொண்டார்.

Breaking News Live : ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு அவருக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

Background

தமிழகத்தில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27ஆம் தேதி) வெளியாக உள்ளன. 


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன.


குறிப்பாக 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மே 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வை சுமார் 8.83 லட்சம் மாணவர்கள் எழுதினர்.


இதனிடையே 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்களைத் திருத்தி முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. 


இதையடுத்து கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். 


ஜூலை மாதத்தில் மறுதேர்வுகள்


கடந்த கல்வியாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு 10ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்தது. 12ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது. தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மறுதேர்வு வைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


இந்நிலையில் இன்று (ஜூன் 27ஆம் தேதி) 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. காலை 10 மணிக்குத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?


மாணவர்கள் முதலில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்பு, தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளத்தில் காணலாம்.


http://tnresults.nic.in/
https://dge.tn.nic.in/
https://dge1.tn.nic.in/
https://dge2.tn.nic.in/


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்:


அதிமுகவில் பரப்பரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.