சமீப காலமாக திமுகவையும் திமுக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இப்போது புயல் மீட்பு நடவடிக்கைகளில் திமுக அரசு முழுமையாக செயல்படவே இல்லை என்று பரபரப்பு புகாரை பதிவு செய்திருப்பதன் மூலம் திமுக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.


என்ன சொன்னார் ஆதவ் அர்ஜூனா ?


அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ”எப்போது விழித்துக்கொள்வோம்? பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் வட மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாடு தொடர்ந்து இயற்கை சீற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், அதை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை மேற்கொள்ளாதது வருத்தத்திற்குரியது. அதேநேரம், மோசமான இயற்கை பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஒடிசா மாநிலம் முறையான கட்டமைப்பு வசதிகளையும் மக்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறை திட்டங்களையும் ஏற்படுத்தியது. அதனால், அங்கு மக்கள் பெரியளவில் இயற்கை பாதிப்புக்கு உள்ளாவதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலோ ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கபடுவதும் அதற்கு அரசு காரணங்களை மட்டும் சொல்வதுமே வாடிக்கையாக உள்ளது என்று நேரடியாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.


திமுக அரசு எப்போதும் பாடம் கற்றுக்கொள்ளும் ? ஆதவ் அர்ஜூனா கேள்வி


மேலும், இதற்கு மனித உயிர்கள் பலியாகியிருப்பதோடு உணவு,உடை போன்ற அடிப்படைத் தேவைக்கே மக்கள் கை ஏந்தும் நிலைமை பெருந்துயர். நாம் இந்த பிரச்சனைகளிலிருந்து என்ன பாடம் கற்றோம் என்ற கேள்வியே எஞ்சுகிறது?... இப்பேரிடரால் பலியானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சார்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், இப்பகுதியின் எளிய மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களை மொத்தமாகச் சிதைத்திருக்கிறது இந்தப் புயல். பலரும் அடிப்படை உணவுக்குக் கூட போராடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் தமது பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல் காலங்களில் மட்டும்தான் ஆளும் தரப்பு வேலை பார்க்குமா ? ஆதவ் கேள்வி


குறிப்பாக, “ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு எப்படி இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொண்டு தேர்தல் வெற்றிக்காக அவர்கள் காட்டும் ஆர்வத்தை இப்போது பெரும் துயரில் மக்கள் சிக்கியுள்ள வேளையில்,இடைத்தேர்தல் பாணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் ஏன் செயல்படவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ள ஆதவ் அர்ஜூனா, முழு அமைச்சரவையும் இந்த பணியில் பங்கெடுப்பதே அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.


சொன்ன விடியலை வழங்குங்கள்  - ஆதவ் அறிவுறுத்தல்


இவை மட்டுமின்றி, இப்பெரும் துயரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தலித் மற்றும் ஏழை, எளிய விவசாய மக்களுக்கு விரைந்து விடியலை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு நம்மை வஞ்சிக்கிறது என்ற காரணத்திற்காகக் காலதாமதப்படுத்தி நம் மக்களை நாம் வஞ்சித்துவிடக் கூடாது என சொல்லியும் திமுக அரசை ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளது கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  2026ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் விசிக இருக்கும் என்று திருமா தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த செயல்பாடு திமுக தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது