Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் சாலை நெரிசல், அணிவகுக்கும் வாகனங்கள்
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சண்டிகர் விமான நிலையத்தில் பாஜகவைச் சேர்ந்த நடிகை கங்கனா ரணாவத்தை அறைந்த விவகாரத்தில் பெண் கான்ஸ்டபிளை ( CISF பிரிவு ) சஸ்பெண்ட் செய்து உள்ளூர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளதாக சிஐஎஸ்எஃப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் முடிவுக்கு வந்தது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூன் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த மாநில அளவிலான உதவி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (செட்) தொழில் நுட்பக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் மாநில வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. தேர்தல் தோல்வி,வாக்கு வங்கி சரிவு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பழைய துணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு லட்சம் மதிப்பிலான பழைய துணிகள் தீயில் எரிந்து நாசம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளஞரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஜூன் 12 ஆம் தேதி ஆந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதால், அவரது பதவியேற்பு விழா தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாசிசத்தை முழுவதுமாக முறியடித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் என பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் 40 க்கு 40 என்ற இலக்கை வென்றதையடுத்து இதை தெரிவித்துள்ளார்.
Background
நாடாளுமன்ற மக்களவைக்கான 18வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டண் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் பிரதமராக, வரும் 8ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் என கூறப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சிக்கும், இனி அமையப்போகும் பாஜக கூட்டணி ஆட்சிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக மோடியால் இனி தன்னிச்சையாக எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது எனவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான பதிவில், “ சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். தென்மாநில நலன்களுக்காகவும், நமது உரிமைக்காகவும், ஒன்றிய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் சந்திரபாபு நாயுடு உறுதியாக வாதிடுவார் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, தென் மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் காலை 10 மணி வரை, திருவாரூர் மற்றும் நாகையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -