அஸ்ஸாமில் டிமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள தொலைதூர தொழில்துறை நகரமான உம்ராங்சோவில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை ஒரு சிறப்பு குழுவை ஈடுபடுத்தியுள்ளது.
ஒரு அதிகாரியையும் பதினொரு மாலுமிகளையும் கொண்ட இந்த குழு, ஆழமான பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் திறமை பெற்ற குழுவாகும். சிறப்பாக பயிற்சி பெற்றவர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.
நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்:
சம்பவ இடத்தில் இந்த குழு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தேடுதலுக்காகவும், மீட்புக்காகவும் ஆழமான டைவிங் கியர்கள், நீருக்கடியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ஆர்.ஓ.வி) போன்ற சிறப்பு உபகரணங்களை இந்தக் குழு பயன்படுத்துகிறது.
உடனடியான, பயனுள்ள மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக இந்திய ராணுவம், தேசிய பேரிடர் படையினருடனும், உள்ளூர் நிர்வாகத்துடனும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்படுகிறது. விசாகப்பட்டினத்தில் இருந்த இந்திய கடற்படை குழு நேற்று சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தது.
தீவிர தேடுதல், மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுமூகமான முறையிலும், தாமதமின்றியும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகளுடன் தொடர்ந்து தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. நெருக்கடி காலங்களில் உடனடி உதவிகளை வழங்க இந்திய கடற்படை உறுதிபூண்டுள்ளது.
நேற்று முன்தினம் உம்ராங்சோவில் உள்ள நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒன்பது சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். தொடர் மீட்பு பணிகளுக்கு பிறகு, இடிந்து விழுந்த நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டது. ஆனால், சுரங்கத்தில் சிக்கியுள்ள மற்ற தொழிலாளர்கள் இன்னும் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!