டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி ஆகியவை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. 


அடுத்த மாதம் 5ஆம் தேதி, டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



டெல்லி தேர்தலில் வெற்றி யாருக்கு?


ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், மேற்குவங்கத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ், உத்தரப் பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சி ஆகியவை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.


மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், டெல்லி தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய கட்சிகள் காங்கிரஸை தவிர்த்து கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


உதவிக்கு வந்த மம்தா:


மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக டிஎம்சி அறிவித்துள்ளது. மம்தா தீதிக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நன்றி தீதி. நல்ல நேரத்திலும் சரி நெருக்கடியான நேரத்திலும் சரி நீங்கள் எப்போதும் எங்களை ஆதரித்து ஆசீர்வதித்துள்ளீர்கள்" என பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக நேற்று இரவு உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ்க்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால், "மிக்க நன்றி அகிலேஷ். நீங்கள் எப்பொழுதும் எங்களுடன் துணை நிற்பீர்கள். இதற்கு நானும் டெல்லி மக்களும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் இந்த இரண்டு கட்சிகள், கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.