பஞ்சாப்பில் சர்வதேச எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 4 நாட்களில் 5 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, இதனால் அமிர்தசரஸில் கடத்தல் முயற்சியை முறியடித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை அதன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் (IB) நேற்று இரவு 9 மணி அளவில் ஆளில்லா விமானம் பைனி ராஜ்புதானா கிராமத்தில் அமிர்தசரஸ் பகிதியை ஊடுருவிய போது எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 'டிஜே மெட்ரிஸ் 300 ஆர்டிகே' தயாரிப்பின் குவாட்காப்டரான கறுப்பு நிற ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதில் 2.1 கிலோ எடையுள்ள ஹெராயின் இணைக்கப்பட்டிருந்ததாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருளை இந்தியாவிற்குள் கடத்த முயற்சி செய்த நபர்கள், இந்திய எல்லையில் விழுந்த சரக்குகளைக் கண்டறிய, ட்ரோனில் சுவிட்ச்-ஆன் செய்யப்பட்ட நிலையில் ஒரு சிறிய டார்ச் இணைக்கப்பட்டிருந்ததாக கூறினார்.
மே 19 ஆம் தேதியிலிருந்து இது 5வது ஆளில்லா விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரண்டு ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது ஆளில்லா விமானமும் கடந்த 20-ஆம் தேதி எல்லை படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால் மூன்றாவது ஆளில்லா விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அதனை மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு இந்திய வான்பரப்பு எல்லையை கடந்த ஆளில்லா விமானம் அமிர்தசரஸ் செக்டார் எல்லையில் துப்பாக்கிச் சூடு மூலம் வீழ்த்தப்பட்டது. அதன் கீழ் 3.3 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு 5 வது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் 2 கிலோவிற்கு அதிகமாக போதை பொருள் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.