முதலமைச்சர் ஸ்டாலின் 9 நாள் அரசுமுறை பயணமாக சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.


முதலமைச்சரை வழியனுப்பிய அமைச்சர்கள்:


தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் செல்கிறார். இதற்கான சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, சேகர் பாபு, த.மோ. அன்பரசன் மற்றும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும், எம்.பிக்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதிமாறன் ஆகியோரும் பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். 


”புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்”


புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள, உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள, பல்வேறு நாடுகளுக்கு சென்று நாங்கள் அழைப்பு விடுத்துக்கொண்டு இருக்கிறோம். அந்த அடிப்படையில் 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்த பயணத்தை நான் மேற்கொள்கிறேன். என்னோடு தொழில்துறை அமைச்சர் மற்றும் அரசு துறையுடைய உயரதிகாரிகளும் வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று பல்வேறு புதிய ஒப்பந்தகள் கையெழுத்திடப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கான இந்த பயணத்தை மேற்கொள்கிறேன்.


செல்கின்ற இடங்களிலெல்லாம் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதோடு, முதலீட்டாளர்கலை நேரிலும், மாநாடுகள் வாயிலாகவும் சந்தித்து பேச இருக்கிறேன். ஒருசில புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன. இந்த பயணத்துடைய முக்கிய நோக்கம் என்பது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதல் உலக மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பது தான். எனவே என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் என்றார். 


கடந்த வெளிநாட்டு பயணத்தின் மூலம் ரூ.6,100 கோடி முதலீடுகள் மூலம் 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, லுலு நிறுவனம் கோவையில் பணியை தொடங்கிவிட்டதாகவும், சென்னையில் இடம் கிடைத்தவுடன் பணிகளை தொடங்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் 226 திட்டங்கள் மூலம் 2.95 லட்சம் கோடிக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என” கூறினார்.


மே 31-ம் தேதி சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்: 


அரசுமுறை பயணமாக விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு நாளை வரை தங்கியிருக்கிறார். அங்கிருந்து மே 25-ல் ஜப்பான் செல்கிறார். அங்கு 6 நாட்கள் வரை தங்கியிருக்கும் அவர், மே 31-ல் சென்னை திரும்புகிறார். தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கனவே சிங்கப்பூர் சென்றுவிட்ட நிலையில், துறை செயலர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர், சிப்காட், திறன் மேம்பாட்டு கழகம், டான்சிம் உள்ளிட்டநிறுவனங்களின் அதிகாரிகள் முதலமைச்சர் உடன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.