மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் மக்கள் நிதானத்தைக் கடைப்பிடித்து மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். “மணிப்பூர் எரிகிறது. பாஜக சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கி, அழகான மாநிலத்தின் அமைதியை அழித்துவிட்டது” என்று கார்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர்
“பாஜகவின் வெறுப்பு, பிளவு அரசியல் மற்றும் அதன் அதிகார பேராசையே இந்த குழப்பத்திற்கு காரணம். எல்லா தரப்பு மக்களிடமும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், அமைதிக்கு வாய்ப்பளிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார். மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
என்ன பிரச்சனை?
மணிப்பூரில் வசித்து வரும் மெய்டீஸ் என்னும் பழங்குடியினர் அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி சமூகத்தினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர்களின் ஒற்றுமை பேரணி நேற்று நடத்தப்பட்டது.
வன்முறையாக மாறியது ஏன்?
மாணவர்கள் அமைப்பு நடத்திய இந்த பேரணிக்கு பழங்குடி அல்லாதோர் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்திய நிலையில், செளரசந்திரபூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரம் ஆனது. இந்த மோதல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில் மலையோர மாவட்டங்களில் உள்ள வீடுகள், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டு வன்முறை பெரிதானது. தமிழர்கள் வாழும் மணிப்பூர்-மியான்மர் எல்லையோர மோரோ கிராமத்திலும் வன்முறை வெடித்த நிலையில், 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் படைகளால் மீட்கப்பட்டு தங்குமிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.