இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5, 2023ல் நிகழவிருக்கிறது. இது பகுதி நேர சந்திர கிரகணம்தான். இதன் வீச்சு மைனஸ் 0.046 என்றளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு வீச்சு மைனஸில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கிரகணம் சக்திவாய்ந்ததாக இருக்கும். மேலும் இந்த வீச்சு என்பது நிலவின் விட்டம் எவ்வளவு தூரம் பூமியின் உள்புற நிழலால் மூடப்படுகிறது என்பதையும் சேர்த்தே குறிக்கிறது.


இந்த ஆண்டில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளது. இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும் வகையில் ஏற்பட உள்ளது. கிட்டத்தட்ட 4 மணிநேரம் இந்த கிரகணம் நிகழ உள்ளது.


இந்த சந்திர கிரகணம் உலகில் உள்ள 7 கண்டங்களில் 5 கண்டங்களில் நன்றாக பார்க்க முடியும். ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் பார்க்க முடியும்.


கிரகணம் என்றால் என்ன?


"சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல்தான். சூரியனை மறைக்கும் நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவில் விழுவது சந்திர கிரகணம். 
சந்திர கிரகணத்தின்போது, சாந்திரன் தன் ஒளியை இழக்கும். ஒரு கருப்பு நிழல்  சந்திரனை மெல்ல மெல்ல மறைக்கத் தொடங்கும். சிறிது நேரம் கழித்து அந்த கருப்பு நிழல் மறுபடியும் விலகி மெல்ல மெல்ல சந்திரன் தன் ஒளியை மீண்டும் பெறுகிறது. மொத்தத்தில் கிரகணம் என்பது ஒரு நிழல் விளையாட்டுதான். இவற்றில் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.


சோபகிருது ஆண்டில் 3 சூரிய கிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழும் எனவும் இதில் ஒரு சந்திர கிரகணம் மட்டுமே இந்தியாவில் தெரியும் எனவும் தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 20-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில் வரும் 5-ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.


ஏன் வீட்டுக்குள் இருக்க வேண்டும்?


சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி இரவு 8.44 மணிக்கு தொடங்குகிறது. இரவு 10.52 மணிக்கு கிரகணம் உச்சம் பெற்று, அதிகாலை 1 மணிக்கு நிறைவடைகிறது. அதாவது, உலக நேரப்படி மே 5 ஆம் தேதி பிற்பகல் 3.14 மணிக்கு தொடங்கி மாலை 7.31 மணி வரை சுமார் 4 மணிநேரம் நடைபெற உள்ளது. 


சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, கிரகணத்திற்கு முந்தைய காலகட்டத்தை "சூதக்" என்று சொல்வார்கள். சந்திர கிரகணத்தைப் பொறுத்தவரை, சூதக் காலம் பொதுவாக சந்திர கிரகணம் தொடங்குவதற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்பு தொடங்குகிறது. இந்துக்கள் சூதக் காலத்தை தீயகாலமாக நம்பப்படுகிறது. அப்போது மக்கள் புதிய வேலையைத் தொடங்குவதையோ அல்லது முக்கியமான முடிவுகளை எடுப்பதையோ தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். கிரகண காலத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.