திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ’ABP நாடு’ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் அடிமையாக செயல்படுகிறார் என்று விமர்சித்துள்ளார்.
சம தர்மமே திராவிட மாடல் – திமுக
திராவிட மாடல் என்பது சமதர்மத்தை குறிப்பது. இந்த கொள்கை படி மனிதர்கள் மனு தர்மம் படி 4ஆக பிரிக்கப்பட்டவர்கள் அல்ல. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் பலரும் இன்று தாங்கள் ‘ஆண்ட பரம்பரை’ என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், சத்திரியர்கள்தான் நாட்டை ஆள வேண்டும் என்ற நிலை இங்கு எந்த காலத்திலும் இருந்தது இல்லை என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே திராவிட மாடல்’
மேலும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் திராவிட மாடல்’ இதை நான் எங்களது கொள்கையாக வைத்துள்ளோம். ஆளுநர் அரசியல் செய்வதற்காக இப்படி பேசுகிறார். எங்களது திராவிட மாடல் என்பது சமத்துவ மாடல். அதைதாண்டி மக்கள் அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்துவதுதான் திராவிட மாடல். அதை நோக்கிதான் நாங்கள் பயணித்து வருகிறோம். எல்லா சமூக மக்களும் மேம்பட்ட நிலைக்கு வரவேண்டும், பதவிகளுக்கு வரவேண்டும் என்ற கோட்பாட்டின் பெயர்தான் இது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
’அரசியல் முழக்கம் இல்லை ; கொள்கை’
திராவிட மாடல் அரசியல் முழக்கம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் டி.கே.எஸ்.இளங்கோவன், இதுதான் கொள்கை இதில் எங்கே அரசியல் முழக்கம் வந்துள்ளது என்றும் வினவியுள்ளார். பாதிக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை மேம்படுத்துவதை காட்டிலும் வேறு என்ன கொள்கை இருக்க முடியும் ? அரசியல் முழக்கமா இது ? இது அனைவருக்குமான கொள்கை, செயல் முழக்கம். அரசியல் முழக்கம் அல்ல என ஆளுநருக்கு பதிலளித்துள்ள டி.கே.எஸ். இளங்கோவன் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‘வரலாறு தெரியாதவர் ஆர்.என்.ரவி – டி.கே.எஸ்’
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வரலாறும் தெரியவில்லை கொள்கையும் புரியவில்லை என்று விமர்சித்துள்ள டி.கே.எஸ். இளங்கோவன், பாஜகவின் பிரதிநிதிபோல செயல்படும் ஆளுநர் ரவி இதைவிட பெரிய பதவியை குறித்து வைத்து அதை பெறுவதற்காக இதுபோன்று பேசிவருகிறார் என்றும் கூறியுள்ளார்.
ஆளுநர் ரவிக்கு சேர, சோழ, பாண்டியர் வரலாறு கூட தெரியாது என காட்டமாக பதிலடி கொடுத்துள்ள அவர், இதுபோன்ற ஆளுநர்களால்தான் பாஜகவின் உண்மை முகம் மக்களுக்கு தெரிய வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் ஆளுநரையும் பாஜகவையும் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள், மீதமுள்ளவர்ள் புரிந்துக்கொள்வார்கள். ரவி என்ன இவ்வளவு பெரிய அறிவு களஞ்சியமா ? என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது (நக்கலாக சிரிக்கிறார்). அதனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு திமுக தகுந்த எதிர்வினையாற்றும்