மத்தியப் பிரதேச அமைச்சரும், பாஜக தலைவருமான விஷ்வாஸ் சாரங் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை 'கமோ' என்ற மாற்றுத்திறனாளி நடனக் கலைஞருடன் ஒப்பிட்டுப் பேசினார். இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், பானஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி நகரில் பாஜக பிரமுகர்கள் முன்னிலையில் விஸ்வாஸ் சாரங் பேசினார். அப்போது குஜராத்தைச் சேர்ந்த டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட நடன கலைஞருடன் ராகுலை ஒப்பிட்டுப் பேசினார்.
கமோ என்றழைக்கப்படும் நடனக் கலைஞர் குஜராத்தில் மிகவும் பிரபலமானவர் ஆவார். நாட்டுப்புற பாடகர்களுடன் இணைந்து அவர் நடனமாடுவார். ராகுலை இவருடன் ஒப்பிட்டு சாரங் பேசியது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
குஜராத்தில் விரைவில் விமான தயாரிப்பு... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!
அந்த வீடியோவில் சாரங், "யார் அது? ஆமாம், கமோ தான்... கமோ தனது பயணத்தை தொடங்கி விட்டார். பாரத் ஜோடோ என்ற பயணத்தை அவர் தொடங்கிவிட்டார். அவர் ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால், ரூ.40,000 மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்துள்ளார். கமோஸ் தாயார் "மன்மோகன் சிங்கை" ரிமோட் மூலம் கட்டுப்படுத்தினார்" என்று பேசியுள்ளார்.
காங்கிரஸ் பதிலடி
இந்த வீடியோவுக்கு குஜராத் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், "கமா மாற்றுத்திறனாளி கலைஞர் ஆவார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாத யாத்திரைக்கு சேர்ந்த கூட்டத்தைக் கண்டு அதிர்த்து போயுள்ளனர். அதனால்தான் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் நடை பயணம் செய்து முடித்த ராகுல், தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் நடை பயணம் செய்து வருகிறார்.