காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை அடுத்து தற்போது ஆந்திராவில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தின் போது வயதான பெண் ஒருவர் ராகுல் காந்தியை கட்டித்தழுவி ஆசீர்வதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ கிளிப்பில், மக்கள் கூட்டம் சுற்றியிருக்க ராகுல் காந்தி ஒரு வயதான பெண்ணுடன் பேசுவதை காணலாம். அந்தப் பெண், ராகுல் காந்தியின் தோளைத் தட்டி ஆசிர்வதிக்கிறார். இறுதியில், வயதான பெண், அவரை கட்டித்தழுவி இரண்டு கண்ணத்திலும் முத்தமிடுகிறார்.
நடைபயணம் முழுவதும் மக்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாடல் மேற்கொண்டு வருகிறார். இதில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, நடைபயணம் தமிழ்நாட்டில் தொடங்கியபோது பெண்கள் சிலருடன் ராகுல் காந்தி உரையாடிய போது நடந்த வேடிக்கையான சம்பவத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டிருந்தார். அதில், தமிழ்நாட்டை ராகுல் காந்தி விரும்புவதால், அவருக்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக அந்த பெண்கள் உரையாடலின் போது கூறியுள்ளனர்.
"மார்த்தாண்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பெண்களுடன் ராகுல் காந்தி உரையாடியபோது, தமிழ்நாட்டை ராகுல் காந்தி நேசிக்கிறார் என்றும் அவருக்குத் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் ஒரு பெண்மணி பேசி இருக்கிறார்" என்று ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்திருந்தார்.
நடைபயணத்தில் வேலைவாய்ப்பின்மை குறித்து பேசிய ராகுல் காந்தி, ”வேலைவாய்ப்பின்மை பிரச்சினையில் இளைஞர்கள் சிக்கியிருக்க கர்நாடகாவில் பாஜக அரசு வேலையை ஏலம் விட்டு சம்பாதிக்கிறது. மாநிலத்தில் அண்மைக்காலமாக ஊழல் மிகுந்துள்ளது.
அதுவும் குறிப்பாக அரசு வேலைவாய்ப்பில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலைக்கு ரூ.80 லட்சம் வரையும், உதவிப் பேராசிரியர், உதவிப் பொறியாளர் பதவிக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது” என்றார்.