தேர்தலின்போது தனிநபர் முதல் பெரிய, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது வழக்கமான ஒன்று. குறிப்பாக, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கி வருகிறது. தேசியக் கட்சி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என கட்சி சார்பற்று நன்கொடைகள் வழங்கப்பட்டு வந்தது.


நன்கொடைகளை வாரி வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள்:


ஆனால், சமீப காலமாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும்பாலான நன்கொடைகள் பாஜகவுக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதன்படி, 2022-23 நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் 90 சதவிகித நன்கொடைகளை பாஜக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


தேர்தலில் சீர்திருத்தம் கோரி வரும் லாப நோக்கமற்ற அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 2022-23 நிதியாண்டில் பாஜகவுக்கு 680.49 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது கார்ப்பரேட் நிறுவனங்கள்.


தேர்தல் ஆணையத்திடம் தேசியக் கட்சிகள் சமர்பித்துள்ள தகவல்களில் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 20,000 ரூபாய்க்கு மேல் பெறப்பட்ட நன்கொடை தொடர்பான விவரங்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு வெளியிட்டப்பட்டுள்ளது. அதன்படி, தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகியவைக்கு கிடைத்த நன்கொடை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


90 சதவிகித நன்கொடைகளை பெற்ற பாஜக:


கடந்த 2022-23 நிதியாண்டில் தேசியக் கட்சிகளுக்கு மொத்தமாக 850.432 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. அதில், பாஜகவுக்கு மட்டும் 719.85 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. அதாவது பெறப்பட்ட மொத்த நன்கொடையில் 90 சதவிகித நன்கொடை பாஜகவுக்கு சென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சிக்கு 79.92 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. 


காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகளின் மொத்த நன்கொடையை சேர்த்து போட்டாலும் பாஜக பெற்ற நன்கொடைக்கு ஈடாகவில்லை. 5 கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை காட்டிலும் 5 மடங்கு அதிக நன்கொடையை பாஜக பெற்றுள்ளது.


2022-23 நிதியாண்டில், தங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் நன்கொடை வழங்கவில்லை என பகுஜன் சமாஜ் தெரிவித்துள்ளது. 2021-22 நிதியாண்டை காட்டிலும் 2022-23 நிதியாண்டில் தேசியக் கட்சிகளுக்கு அதிக அளவில் நன்கொடை கிடைத்துள்ளது. 91.70 கோடி ரூபாய் அதிக நன்கொடையை பெற்றுள்ளது.


பாஜகவுக்கு கிடைக்கும் நன்கொடைகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் கட்சிக்கும் கிடைக்கும் நன்கொடைகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, வழங்கப்பட்ட மொத்த நன்கொடையில் 680.49 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் வழங்கியுள்ளது. அதில், 610.49 கோடி ரூபாய் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.