தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாமகவோ உட்கட்சி மோதலால் சிதைந்து வருகிறது. கட்சியின் அடையாளமாக திகழும் ராமதாசும், அன்புமணியும் அதிகார மோதலில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் தேர்தலுக்கு தயாராவது தாமதம் ஆகி வருகிறது.

வலுக்கும் ராமதாஸ் - அன்புமணி மோதல்:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தந்தை - மகன் மோதலில் ராமதாஸ் தனது நிறுவனர் என்ற அதிகாரத்தையும், செல்வாக்கையும் அதிகரிக்க தாயைத் தாக்கினார் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை அன்புமணி மீது அடுக்கி வருகிறார். ராமதாஸ் பாணியில் அன்புமணி தாக்குதல் நடத்தாவிட்டாலும் ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார், அவர் 3 பேர் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று ராமதாஸ் குற்றங்களுக்கு இந்த பாணியில் பதில் அளித்து வருகிறார். 

மேலும், பாமக விதிப்படி தலைவர் தான் என்பதால், தனக்கே அதிகாரம் என்று கட்சியின் சட்ட ரீதியாக தன்பக்கம் கொண்டு வர காய்களை நகர்த்தி வருகிறார். கட்சியின் பொருளாளர், பொதுச்செயலாளர் ஆகியோரும் அன்புமணி பக்கமே நிற்கிறார்கள். பாமக-வின் மூத்த நிர்வாகிகள் பலரும் ராமதாஸ் பக்கம் நிற்க, எதிர்கால தலைவர் அன்புமணியே என்பதால் அன்புமணி பக்கம் இருப்பதே தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பாமக-வின் நிர்வாகிகள் சிலர் கருதுகின்றனர். 

அன்புமணியின் ஆதிக்கம்:

சமூக வலைதளங்களிலும் அன்புமணி ஆதரவாளர்கள் ஆதிக்கம் அதிகளவு காணப்படுகிறது. ராமதாஸ் நியமிக்கும் நிர்வாகிகளின் செல்வாக்கை காட்டிலும் அன்புமணியின் பக்கம் உள்ள நிர்வாகிகளின் செல்வாக்கு மிகவும் அதிகளவில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு ராமதாஸ் ஆதரவாளர்கள் பலரும் அன்புமணி பக்கம் சாய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அன்புமணி டெல்லி சென்றுள்ள நிலையில், அங்கு அவர் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கே என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது டெல்லி பயணம் அதற்காகவே அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அன்புமணி பக்கம் அந்தர் பல்டி:

பா.ஜ.க.வுடனான கூட்டணியை மிகவும் ஆணித்தரமாக அன்புமணி வலியுறுத்தி வருவதால், மத்திய அரசும் அவருக்கு ஆதரவாகவே செயல்படும் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க. தரப்பினர் அன்புமணி - ராமதாஸ் ஆகிய இருவரையும் தங்கள் பக்கம் கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார்கள். அதேசமயம், அன்புமணி - ராமதாஸ் மோதல் உச்சம் அடைந்து வரும் நிலையில் , காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை ராமதாசை சந்தித்ததும் தமிழக அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமதாஸ் அணி, அன்புமணி அணி என்று உருவாகியுள்ள பாமக-வில் அன்புமணி பக்கம் நிற்பதே தங்களது எதிர்கால அரசியலுக்கு நல்லது என்று கட்சியின் புதிய நிர்வாகிகள், வளரும் நிர்வாகிகள் மற்றும் சில மூத்த நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர். இதனால், ராமதாஸ் தரப்பில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலர் அன்புமணியின் டெல்லி பயணத்திற்கு பிறகு ராமதாஸின் ஆதரவாளர்கள் அன்புமணி பக்கம் தாவுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாசும் தனது தரப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.