மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா, வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஆசாத் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அங்கு, பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்தது.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்?
கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மொத்தம் 234 தொகுதிகளில் வென்று, சாதனை படைத்தது. பாஜக மட்டும் 132 இடங்களை கைப்பற்றியது. சிவசேனா 57 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதன் மூலம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து அறிவிக்கப்படாத நிலையில், பதவியேற்பு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, பதவியேற்பு விழா நடைபெறும் என மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே அறிவித்துள்ளார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் தொடர் ரகளை:
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்-க்கு முதலமைச்சர் பதவி தரப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், முதலமைச்சர் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என தற்போதைய முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கேட்டு வந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த சூழலில், இந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஆட்சி அமைக்க தடையாக இருக்க மாட்டேன் என ஷிண்டே கூறினார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி தலைவர்களிடையே தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், தற்போதுவரை, முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிக்க: Fengal Cyclone Landfall: அப்பாடா.! ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க ஆரம்பித்தது.! அப்போ, எப்போ முடியும்?