ஹரியானா, மகாராஷ்டிரா என அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


மக்களவைத் தேர்தலை தொடர்ந்து ஹரியானா ஜம்மு காஷ்மீர் ஜார்க்கண்ட் ம,காராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த அளவில் வெற்றியை இயற்றிய காங்கிரசுக்கு சட்டமன்றத் தேர்தல் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.


ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளால் ஷாக்:


குறிப்பாக அரியானாவில் பெரும் வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதோடு, மகாராஷ்டிராவில் மெகா கூட்டணியை அமைத்துப் போட்டியிட்ட போதிலும் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.


மகாராஷ்டிராவில் வெறும் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளான உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பத்து இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.


உட்கட்சி பூசல், பலவீனமான கட்சி கட்டமைப்பு ஆகியவையே தேர்தல் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதைத் தவிர, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தேர்தல் விதிகளை மீறி செயல்பட்ட பாஜகவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.


கார்கேவுக்கு ஐடியா கொடுத்த ராகுல் காந்தி:


இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, உட்கட்சி பூசலில் ஈடுபட்டவர்களுக்கும் கட்சியிலிருந்து கொண்டு கட்சிக்கு எதிராக பேசியவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


"தேர்தலில் ஒற்றுமையாக போராடாமல், கட்சியில் ஒருவருக்கு ஒருவர் எதிராக பேசுவதை நிறுத்தவில்லை என்றால் அரசியல் ரீதியாக எப்படி எதிரிகளை தோற்கடிக்க முடியும்?" என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.


கார்கேவின் கருத்துடன் உடன்பட்ட ராகுல் காந்தி, "எதிர்த்து போராடும் அமைப்பாக காங்கிரஸ் உள்ளது. கட்சித் தலைவர்கள் அதில் நம்பிக்கை வைக்க வேண்டும். சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.


"மனச்சோர்வடையவோ அல்லது பீதி அடையவோ தேவை இல்லை. புதுப்பிக்கப்பட்ட உறுதியுடனும் நாம் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். முன்னெப்போதையும் விட இப்போது ஒழுக்கம் தேவை" என கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.