ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் பதவியேற்ற விழாவில், எதிர்க்கட்சி தலைலர் ராகுல் காந்திக்கு கை கொடுக்காமல் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டும் காணாமல் சென்றதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்வோம்.


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக நேற்று முன்தினம் 4ஆவது முறையாக பதவியேற்றார். அம்மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.


சோரன் பதவியேற்பு விழாவில் நடந்தது என்ன?


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.


அப்போது, விழா மேடைக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்திக்கு கை கொடுக்காமல் கண்டும் காணாமல் சென்றதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


 






ஆனால், இது தவறான தகவல். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் இருப்பது போன்று நடக்கவில்லை. அது, எடிட் செய்யப்பட்டு, பரப்பப்பட்டு வருகிறது. பதவியேற்பு விழாவின் முழு வீடியோவில் ராகுல் காந்திக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கை கொடுத்து நலன் விசாரித்து கொள்வது பதிவாகியுள்ளது.


டெல்லியில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி தனித்து களம் காண்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தியா கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி அங்கு கூட்டணி அமைக்காமல் தனியே போட்டியிடுகிறது.


இதையும் படிக்க: Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்