வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது, கரையை கடக்க ஆரம்பித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கணிப்புக்குள் சிக்காத ஃபெஞ்சல்:


வங்க கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயலானது, ஆரம்பத்திலிருந்தே அதன் போக்கை உறுதியாக கணிப்புதில் சிக்கல்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. தொடக்கத்தில் புயல் உருவாகும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புயலாக உருவாகாது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் கரையை கடக்கும் என, நேற்று தெரிவிக்கப்பட்டது. 


கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்:


இந்நிலையில் தற்போது ஃபெஞ்சல் புயலானது,  காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே மரக்காணத்திற்கு அருகே, மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க ஆரம்பித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புயலானது, முன் பகுதி, கண் பகுதி மற்றும் பின்பகுதி என மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்படும் நிலையில், தற்போது முன்பகுதி கரையை கடக்க ஆரம்பித்துள்ளது. இதனால, கரையை கடக்கும் பகுதிகளில், கனமழை மற்றும் அதீத காற்று வீசும் என்பதால் சேதத்தை ஏற்படுத்தும். இதையடுத்து, 2வது பகுதியான கண்பகுதி நகரும் போது, மிகுந்த அமைதியாக இருக்கும், மழை - அதீத காற்று இருக்காது. இதனை தொடர்ந்து பின்பகுதி நகரும் போது, கனமழை மற்றும் அதீத காற்று இருக்கும் என கூறப்படுகிறது. 


மழை பெறும் பகுதிகள்


இதனால் , புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


வட கடலோர ,மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும், நள்ளிரவு பொழுதில் விட்டு விட்டு மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், கடலலையின் வேகமானது அதீத ஓசையுடன், மேல் எழுந்து வருகிறது. இதனால், கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.