பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. 117 உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சராக நான்கு ஆண்டுகாலம் இருந்த அம்ரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பதவி விலகினார். அத்துடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். 


அதன்பின்னர் அவர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். அவருடைய கட்சியும் பாஜகவும் தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இது தொடர்பாக இரு கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த இரண்டு கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 






இதுகுறித்து பாஜகவின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் கஜேந்திர சிங் ஷேகாவட்,”7 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று பாஜக மற்றும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணி உறுதியாகியுள்ளது. நாங்கள் இருவரும் கூட்டணியாக வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறோம். இரு கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பாக பின்னர் கலந்து ஆலோசிக்கப்படு முடிவு எடுக்கப்படும்”  எனக் கூறினார்.






மேலும் இந்தக் கூட்டணி தொடர்பாக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங், ”எங்களுடைய கூட்டணி நிச்சயம் வரும் தேர்தலில் வெற்றி அடையும். 101% சதவிகிதம் எங்களுடைய தேர்தல் வெற்றி உறுதியாகியுள்ளது. இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பின்னர் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 


மேலும் படிக்க: புதிய திருமண வயது 21: பெண்களுக்கு வரமா, சாபமா?